/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் மதிப்பெண் 33 ஆக குறைக்க அரசுக்கு அறிக்கை
/
எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் மதிப்பெண் 33 ஆக குறைக்க அரசுக்கு அறிக்கை
எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் மதிப்பெண் 33 ஆக குறைக்க அரசுக்கு அறிக்கை
எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் மதிப்பெண் 33 ஆக குறைக்க அரசுக்கு அறிக்கை
ADDED : ஜூலை 08, 2025 11:53 PM
பெங்களூரு : எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 33 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்று அறிவிக்கும்படி, அரசுக்கு கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.
கர்நாடகாவில் 2025ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், கடந்த மே 2ம் தேதி வெளியானது. 625க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து 22 மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர்.
ஆனாலும் 2024ல் 73.40 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 62.34 சதவீதமாக குறைந்தது. 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி, கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியத்திற்கு, அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது பற்றி, அரசிடம், பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சி.பி.எஸ்.சி., பாடப்பிரிவில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. 33 மதிப்பெண் எடுத்தாலே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றனர்.
மாணவர்கள் செயல்திறனை மதிப்பிடும் வகையில் 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மீதம் 80 மதிப்பெண்களுக்கு நடக்கும் தேர்வில் 13 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., நடைமுறையை மாநில கல்வியிலும் அறிமுகப்படுத்தலாம்.
அதாவது தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணை 35ல் இருந்து 33ஆக குறைக்கலாம். 33 முதல் 35 மதிப்பெண்களுக்கு இடையே நிறைய பேர் தோல்வி அடைகின்றனர்.
இதுபோல முதல்மொழி தேர்வு 125 மதிப்பெண்களுக்கு நடக்கிறது. அதை 100 மதிப்பெண்ணாக குறைக்க வேண்டும். 625 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்துவதை 600ஆக குறைக்க வேண்டும்.
எங்களது பரிந்துரையை 2026 தேர்வில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.