ADDED : ஜன 27, 2026 05:02 AM
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
துமகூரு நகரின், மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பரமேஸ்வர் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். இதில் நடந்த அணிவகுப்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பீதர் நகரின் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த விழாவை, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே துவக்கி வைத்து ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
மகளிர் ஓட்டுநர் பூரிப்பு
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின், ஹூப்பள்ளி அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில், துப்புரவு வாகன மகளிர் ஓட்டுநர் கல்லவ்வா காளி, 57,யை கொடியேற்ற வைத்து, மாறுபட்ட முறையில் விழா கொண்டாடப்பட்டது. இதே வேளையில் துப்புரவு வாகனங்களின் 130 க்கும் மேற்பட்ட மகளிர் ஓட்டுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மேரிஸ் தீவில் முதன் முறை
உடுப்பியின் மல்பே கடற்கரையில் உள்ள, வரலாற்று பிரசித்தி பெற்ற செயின்ட் மேரிஸ் தீவில், முதன் முறையாக விழா கொண்டாடப்பட்டது. மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கொடியேற்றினார். இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததற்காக பெருமைப்பட்டார்.
பா.ஜ., - எம்.எல்.சி., வெளிநடப்பு
கதக் நகரின் விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கொடியேற்றிய பின், உரையாற்றும் போது 'ஜி ராம் ஜி' திட்டத்தை பற்றி பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த பா.ஜ., - எம்.எல்.சி., சங்கநுாரா, ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இவரை கண்டு கொள்ளாமல், அமைச்சர் தொடர்ந்து பேசினார். பொறுமையிழந்த எம்.எல்.சி., சங்கநுாரா, மேடையில் இருந்து இறங்கி வெளியேறினார்.
அதிகாரிகள் குளறுபடி
பெங்களூரின் மானக்ஷா அணிவகுப்பு மைதானத்தில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஜி.பி.ஏ., என குறிப்பிடுவதற்கு பதிலாக, பி.பி.எம்.பி., என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பல மாதங்களாகியும் அதே பெயரில் வரவேற்பு பலகைகள் வைத்து, அதிகாரிகள் குளறுபடி செய்திருந்தனர்.
365 தியாகிகள் விபரம்
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களில், நேற்று காலையில் விழா கொண்டாடப்பட்டது. ஆனால் ஹாவேரி, ராணி பென்னுாரின், கோடியாளா கிராம பஞ்சாயத்தில் நேற்று மாலை, வித்தியாசமாக கொண்டாடப்பட்டது.
இங்கு வசிக்கும் கலைஞர் மெஹந்தளே என்பவர், சுதந்திர போராட்டக்காரர்களில், முக்கியமான 365 பேரின் பெயர்கள், அவர்களின் பிறந்த தேதி, அவர்கள் காலமான தேதியுடன் கூடிய நினைவு பலகைகள் செதுக்கியுள்ளார். இரண்டு அடி அகலம், மூன்று அடி உயரமான 12 கருமையான கற்களில் சுதந்திர போராட்டக்காரர்களின் பெயரை செதுக்கினார்.
இவைகள் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் பொருத்தி, குடியரசு தினம் கொண்டாடினர்.

