சந்தன மரங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் இருந்தால் தெரிவிக்க கோரிக்கை
சந்தன மரங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் இருந்தால் தெரிவிக்க கோரிக்கை
ADDED : மே 11, 2026 11:18 PM
மைசூரு: 'சந்தன மரங்களை வெட்டி கடத்துவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் தொழில்நுட்பங்களோ, உபகரணங்களோ இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம்' என, பொதுமக்களை, கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
சந்தன மரத்திற்கு மவுசு எப்போதும் உண்டு. சந்தன மரத்தின் தேவை அதிகம். ஆனால் அவற்றை நட்டு வளர்த்து பராமரிப்பது என்பது பெரும் சவாலானது.
அவற்றை வெட்டிக் கடத்தும் கும்பலிடம் இருந்து, சந்தன மரங்களைக் காப்பது பெரும் போராட்டமாகவே இருப்பதால், விவசாயிகள் சந்தன மரங்களை வளர்க்க விரும்புவதில்லை.
இந்நிலையில், சந்தன மரங்களை வெட்டி கடத்துவதை தவிர்க்கவும் அவற்றை பாதுகாக்கவும் என்ன செய்வது என்பது குறித்து கே.எஸ்.டி.எல்., ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்த மேம்பட்ட தொழில்நுட்பத்தையோ, ஆலோசனைகளையோ, கே.எஸ்.டி.எல்.,யிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். அதிகாரிகள் முன்னிலையில் தொழில்நுட்பம் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கலாம் என கே.எஸ்.டி.எல்., அழைப்பு விடுத்துள்ளது.
