/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகாரத்தை தக்கவைப்பது இயற்கை: அமைச்சர் பதிலடி
/
அதிகாரத்தை தக்கவைப்பது இயற்கை: அமைச்சர் பதிலடி
ADDED : ஜூலை 23, 2025 08:49 AM

பெலகாவி : ''அரசியலில் தங்கள் பலத்தை காட்ட நினைப்பதும்; அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதும் இயற்கை தான்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டிக்கு, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பதிலடி கொடுத்துள்ளார்.
பெலகாவி என்றால் கட்டி - ஜார்கிஹோளி குடும்பத்தினர் மிகவும் பிரபலம். இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக செல்வாக்கு மிக்கவர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் இருந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இரு குடும்பங்களுக்கு இடையே, மாவட்டத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
பெலகாவி மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் தேர்தல் தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டி, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி இடையே போட்டி நிலவி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பெலகாவியில் நடந்த பா.ஜ., கூட்டத்தில், பேசிய ரமேஷ் கட்டி, 'ஹுக்கேரி தாலுகாவுக்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியாது. தாலுகாவின் நான்கு திசைகளிலும் என் சகோதரர் மகன் நிகில் கட்டி, நான், என் மகன்கள் பிருத்வி கட்டி, பவன் கட்டி இருக்கிறோம். யாராலும் உள்ளே நுழைய முடியாது. நேருக்கு நேர் போட்டியிட தயாராக இருக்கிறோம்' என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலடியாக சதீஷ் ஜார்கிஹோளி கூறியதாவது:
டி.சி.சி., வங்கி ஊழியர்களை நிரந்தரம் ஆக்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு செய்யவும் மாட்டோம். அது எங்களின் பழக்கம் அல்ல.
நேருக்கு நேர் போட்டியிட இன்னும் காலம் உள்ளது. இப்போதே போட்டியிட முடியாது. நேரம் வரும்போது அதற்கு பதிலளிப்பேன். அவர்களின் ஒற்றுமையை, அவர்கள் காண்பித்து உள்ளனர்; எங்கள் ஒற்றுமையை நாங்கள் காட்டுவோம்.
அரசியலில் தங்கள் பலத்தை காட்ட நினைப்பதும்; அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதும் இயற்கை தான். நேரம் வரும்போது கூறுகிறேன். அவர்களுக்கு அவசரமாக இருக்கலாம்; எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., வசம் இருந்த சிக்கோடி லோக்சபா தொகுதியில், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா ஜார்கிஹோளி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.