/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கருடாச்சார் மறைவு
/
ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கருடாச்சார் மறைவு
ADDED : மார் 29, 2025 05:28 AM

பெங்களூரு : பெங்களூருக்கு முதல் டிராபிக் சிக்னல் கொண்டு வந்த ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கருடாச்சார், 96, நேற்று காலமானார்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகாவின் பின்டிகவிலே கிராமத்தை சேர்ந்தவர் கருடாச்சார், 96. இவர், 1953ம் ஆண்டு ஐ.பி.எஸ்., ஆக தேர்வானார். தமிழகத்தின் திருநெல்வேலியில் உதவி போலீஸ் கமிஷனராக, தன் பணியை துவக்கினார்.
கர்நாடகா தனி மாநிலமான பின், கர்நாடகா கேடர் அதிகாரியாக இங்கு பணி செய்தார். 1976 முதல் 1980 வரை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். போலீஸ் துறையில் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்.
பெங்களூரில் குற்றங்களை கட்டுப்படுத்தி, சட்டம் - ஒழுங்கை காப்பாற்றி, மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தார். பெங்களூரு நகரின் முதல் போலீஸ் கமிஷனராக இருந்த சாண்டியின் பதவி காலத்தில், பெங்களூரு போக்குவரத்து பிரிவு டி.சி.பி.,யாக இருந்த கருடாச்சார், என்.ஆர்.சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருந்ததால், டிராபிக் சிக்னல் பொருத்தினார். இது பெங்களூரில் பொருத்தப்பட்ட முதல் டிராபிக் சிக்னல் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பல்வேறு மாவட்டங்களின் எஸ்.பி., பெங்களூரு நகர டி.சி.பி., நகர போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி.,யாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். கர்நாடக நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இவரது மகன் உதய் கருடாச்சார்யா, பெங்களூரு சிக்பேட் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். வயது முதிர்வால் ஏற்பட்ட நோயால் அவதிப்பட்ட கருடாச்சார், நேற்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன், நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட, அரசியல் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.