பிரதமர் வந்த போது இறைச்சி கடைகள் மூடியதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கண்டனம்
பிரதமர் வந்த போது இறைச்சி கடைகள் மூடியதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கண்டனம்
UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 11:30 PM

பெங்களூரு: பெங்களூருக்கு பிரதமர் மோடி வந்த போது இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டதை, ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் விமர்சித்து உள்ளார்.
பெங்களூரு மெட்ரோ ரயில், பிங்க் வழித்தடத்தில் ரயில் சேவையை துவங்குவதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். அவரது வருகையை ஒட்டி, பெங்களூரு ஆனேக்கல் பகுதிகளில் இறைச்சி கடைகளை மூடுமாறு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் கூறியதாவது:
பிரதமர் வருவது மாநிலத்திற்கு பெருமை தான். அவர் வரட்டும். ஆனால், இறைச்சி கடைகளை ஏன் மூட வேண்டும். மதுபான கடைகளை மூடியிருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன். ஒருவர் தனக்கு விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு உண்டு.
பிரதமர் வருகைக்கும், இறைச்சி கடைகளை மூடுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது... ஒருவர் எந்த உணவை வேண்டுமானாலும் தேர்வு செய்து சாப்பிடலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
