நெல் பற்றாக்குறை எதிரொலி அரிசி விலை கிடுகிடு உயர்வு
நெல் பற்றாக்குறை எதிரொலி அரிசி விலை கிடுகிடு உயர்வு
UPDATED : அக் 17, 2026 03:17 AM
ADDED : அக் 16, 2026 10:36 PM

பெங்களூரு: கர்நாடகாவின், பல்வேறு மாவட்டங்களில், அரிசி விலை தொடர்ந்து ஏறுமுகமாக மாறியுள்ளது. 45 ரூபாய்க்கு கிடைத்த அரிசியின் விலை, தற்போது 75 ரூபாயாக அதிகரித்துள்ளது. மழை இல்லாததும், அணைகளில் நீர்மட்டம் குறைந்ததுமே, அரிசி விலை உயர்வுக்கு காரணமாகும்.
பொதுவாக, தாவணகெரே, ஷிவமொக்கா என, பல மாவட்டங்களில், ஆண்டுக்கு இரண்டு முறை, நெல் பயிரிடுவது வழக்கம்.
ஆனால், இம்முறை தென் மேற்கு பருவ மழை சரியாக பெய்யவில்லை. அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதால், பயிர்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே விவசாயிகள் பலரும். நெல் பயிரிடவில்லை.
நதிநீர் பாசன வசதியுள்ள ஹரிஹரா, ஹொன்னாளி, நியாமதி, ஹரப்பனஹள்ளி தாலுகாக்களில் பம்ப்செட்களை, பயன்படுத்தி நெல் பயிரிட்டுள்ளனர்.
ஆனால், 75 முதல் 80 சதவீதம் விவசாயிகள் நெல் பயிரிடுவதில், ஆர்வம் காட்டவில்லை. இதன் விளைவாக அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது.
தாவணகெரே மாவட்டத்தில் உள்ள 60 அரிசி மில்களில், 10 மில்கள் மட்டுமே செயல்படுகின்றன. சரியான நேரத்தில் நெல் கிடைக்காததால், பெரும்பாலான மில்கள் அரிசி உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
மற்ற மில்களில் உள்ள நெல் சேகரிப்பும், காலியாகி வருவதால் மில் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கிருஷ்ணா நதி நீர் பாசனத்துக்கு உட்பட்ட, கொப்பால், கங்காவதி பகுதிகளில் நெல் உற்பத்தி இயல்பாக நடந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், நெல் விளைச்சல் குறைந்ததால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அந்த மாநிலங்களில் இருந்தும் அரிசி வரவில்லை. எனவே அரிசி விலை அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசு, 'பாரத் ரைஸ்' என்ற பெயரில் கிலோவுக்கு 30 முதல், 35 ரூபாய்யில் தரமான அரிசி வழங்குகிறது. இத்திட்டத்தை. பலப்படுத்த வேண்டும் என, வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
