/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் அதிகரிக்கும் காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
/
பெங்களூரில் அதிகரிக்கும் காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
பெங்களூரில் அதிகரிக்கும் காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
பெங்களூரில் அதிகரிக்கும் காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
ADDED : செப் 22, 2025 04:10 AM
பெங்களூரு : வானிலை மாற்றம் காரணமாக, பெங்களூரில் வைரல் காய்ச்சல் அதிகரிக்கிறது. மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் பரவலாக மழை பெய்கிறது. சில நாட்கள் வெயிலும் உள்ளது. குளிர்ந்த காற்று வீசுகிறது. வானிலை மாற்றத்தின் விளைவாக, மக்கள் நோயால் அவதிப்படுகின்றனர். பெங்களூரு மட்டுமின்றி, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும், இதே சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வைரல் காய்ச்சல், வயிற்று வலி, டைபாய்டு, தொண்டை வலி உட்பட, பல்வேறு நோய்கள் மக்களை வாட்டுகின்றன. அரசு, தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீரை அருந்தாமல், கொதிக்க வைத்து அருந்துவது நல்லது.
சிறார்கள், மூத்த குடிமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களை நோய் எளிதில் தாக்கும்.
இவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சமீப நாட்களாக அசுத்தமான நீரால் வாந்தி, வயிற்று போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படும் சம்பவங்கள் நடக்கின்றன. வைரல் காய்ச்சல், ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு எளிதில் பரவும். எனவே நோய் உள்ளவர்களை தனிமைப்படுத்துவது நல்லது.
நோய் அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும். நோய்களை கட்டுப்படுத்த வேண்டுமானால், சுகாதாரத்துறை தெரிவிக்கும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.