ADDED : ஜூன் 19, 2025 11:25 PM

நம் தேசத்தில் உள்ள பல சாலைகளின் பெயர்கள் அரசியல் தலைவர்களின் பெயரை கொண்டிருப்பதை பார்த்திருப்போம். விளையாட்டு வீரர்களின் பெயர்களை கொண்ட சாலைகளை பார்ப்பது அரிது.
ஆனால், மைசூரில் விளையாட்டு வீரரின் பெயரை கொண்ட சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையை பற்றி விவரிக்கிறது இக்கட்டுரை.
மைசூரு என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அரண்மனை. அரண்மனையை தாண்டி பல விஷயங்களில் மைசூரு பிரபலமானது. அதில் ஒன்று மல்யுத்தம்.
ஜாம்பவான்
மைசூரில் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில், மல்யுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் வகையில், மைசூரில் உள்ள ஒரு தெருவுக்கும் மல்யுத்த வீரர் ஒருவரின் பெயரும் சூட்டப்பட்டு உள்ளது.
மைசூரின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களில் ஒருவரான உஸ்தாத் பாப்பையண்ணவரா. இவர், 1870ம் ஆண்டில், மைசூரில் பணக்கார வீட்டில் பிறந்தார்.
இவர் 16 வயதிலே மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டார். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம், 19ம் நுாற்றாண்டில் மல்யுத்தத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார். பல பயில்வான்களை தோற்கடித்தார்.
மல்யுத்தத்தில் சக்திவாய்ந்த வீரரான திம்மையா என்பவருடன், பாப்பையாவுக்கு 1910ல் நடந்த போட்டியில், கடும் போராட்டத்துக்கு பின், பாப்பையா இறுதியாக வெற்றி பெற்றார்.
'கர்நாடக குஸ்தி கண்டீரவா' எனும் உயரிய பட்டத்தை பெற்றார். தேசிய அளவில் பிரபலம் அடைந்தார். இதன்பின், ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட மல்யுத்த போட்டியிலும், பாப்பையா தங்க பதக்கம் பெற்றார்.
நீங்கா நினைவுகள்
இப்படி பல சாதனைகளை புரிந்தார். மைசூரு அரச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். மல்யுத்தத்தில் தனக்கென இடத்தை பிடித்தார். இதனால், அவர் மறைந்தாலும், அவரது நினைவுகள் நீங்கவில்லை.
அவரது பெயரை தினமும் உச்சரிக்கும் விதமாக, இன்றும் அவர் வாழ்ந்த காந்தி சதுக்கதுக்கு அருகிலுள்ள தெருவுக்கு உஸ்தாத் பாப்பையண்ணவரா சாலை என பெயரிடப்பட்டு உள்ளது.
அவரது பெயர் இன்றும் உச்சரிக்கப்படுவதன் மூலம், பலரின் மனதிலும் வாழ்ந்து வருகிறார்
- நமது நிருபர் -.