சாலையோரத்தில் 'பார்க்கிங்' ரூ.3 கோடிக்கு வருவாய் இலக்கு
சாலையோரத்தில் 'பார்க்கிங்' ரூ.3 கோடிக்கு வருவாய் இலக்கு
ADDED : ஆக 31, 2026 01:59 AM
பெங்களூரு: சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிப்பதன் மூலம், ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் ஈட்ட, ஜி.பி.ஏ., திட்டமிட்டு உள்ளது.
பெங்களூரில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடத்தை தேடி கண்டுபிடிப்பது சவாலான காரியங்களில் ஒன்றாகும்.
எனவே, சாலையின் இரு புறங்களில் வாகனத்தை நிறுத்த ஏற்பாடு செய்து, அதன் மூலம் பணத்தை ஈட்ட, ஜி.பி.ஏ., கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
முதற்கட்டமாக, பெங்களூரின் 20 பிரதான சாலைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இச்சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்த இடம் அளிக்கப்படும்.
இங்கு பைக் நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு 15 ரூபாய்; கார் நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.
வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
இதன் மூலம், ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இத்திட்டம் வெற்றியடைந்தால் நகரில் உள்ள மேலும், 80 சாலைகளின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்படும்.
