/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாமினில் செல்லும் கைதிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள்
/
ஜாமினில் செல்லும் கைதிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள்
ஜாமினில் செல்லும் கைதிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள்
ஜாமினில் செல்லும் கைதிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள்
ADDED : ஆக 07, 2025 05:11 AM
பெங்களூரு : பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், ரவுடி கைதிகள், ஜாமினில் விடுதலையாகி வெளியே செல்லும் கைதிகளை மிரட்டி, பணம் பறிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறையில் மொபைல் போன் பயன்பாடு தடுக்கப்படாமல் தொடர்கிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், முறைகேடுகள் நடப்பது அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. வி.ஐ.பி., கைதிகள் பணம் கொடுத்தால் போதும், ராஜ உபச்சாரம் கிடைக்கும். சொகுசு அறை, விருப்பமான உணவு, 'டிவி', ஏர் கூலர், மொபைல் போன், போதைப்பொருட்கள் என, அனைத்தும் கிடைக்கின்றன. உயர் அதிகாரிகள் அவ்வப்போது சிறையில் சோதனை நடத்தி, மொபைல் போன், சிம் கார்டு, பணம் உட்பட சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் அங்கு நடக்கும் முறைகேடுகளை, கட்டுப்படுத்த முடியவில்லை.
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான, நடிகர் தர்ஷன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தார். அப்போது இவர் சிறைக்கு வெளியே, இருக்கையில் அமர்ந்து, சிகரெட் பிடித்தபடி ரவுடி கைதிகளுடன் அரட்டை அடித்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. பலரும் இது சிறையா அல்லது நட்சத்திர ஹோட்டலா. கைதிகளுக்கு சிகரெட், மொபைல் போன் எப்படி கிடைக்கிறது என, கேள்வி எழுப்பினர்.
சொகுசு வாழ்க்கை இதற்கிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டுள்ள ரவுடி கைதிகள், ஜாமின் பெற்று வெளியே செல்லும் கைதிகளை, மொபைல் போன் மூலமாக தொடர்பு கொண்டு மிரட்டி, பணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது. ரவுடி கைதிகள், சிறையில் சொகுசாக வாழ்க்கை நடத்த பணம் தேவை ஏற்படுகிறது.
இதற்காக அவர்கள், சிறையில் இருந்து வெளியே சென்ற கைதிகளிடம், கூகுள் பே, போன் பே மூலம் பணம் வசூலிக்கின்றனர்.
குறிப்பாக விசாரணை கைதிகளை, ரவுடிகள் குறி வைக்கின்றனர்.
இதுவரை பலருக்கு கொலை மிரட்டல் விடுத்து, பணம் பெற்றுள்ளனர். போதைப்பொருள் வழக்கில் அருள்குமார் என்பவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். அவர் இரண்டு மாதங்களுக்கு முன், ஜாமின் பெற்று விடுதலையானார்.
இவரை சிறையில் உள்ள நெல்சன் சாவன் என்ற பப்லு, குரு மற்றும் அவரது கூட்டாளிகள், வாட்ஸாப் அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். தாங்கள் கூறிய நபர்களுக்கு கூகுள் பே, போன் பே மூலமாக பணம் அனுப்ப வைத்தனர். லட்சக்கணக்கான ரூபாய் பெற்றும் கூட, மீண்டும் தொல்லை கொடுத்தனர். அவர் இது குறித்து, சி.சி.பி.,யில் புகார் அளித்தார்.
பலர் மீது வழக்கு அதன்பின் போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, ரவுடி கைதிகள், அருள்குமார் மட்டுமின்றி, ஜாமினில் விடுதலையான பல கைதிகளிடம் பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, ரவுடி கைதிகள் ஹர்ஷித், கங்கராஜு, நெல்சன் சாவன், விஜி என்ற குரு, சேத்தன், சங்கர் உட்பட, பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரவுடி கைதிகள், ஜாமின் பெற்று வெளியே சென்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பர். தங்களின் கூட்டாளிகள், உறவினர்களுக்கு பணம் அனுப்ப செய்வர்.
அவர்கள் அந்த பணத்தை சிறைக்கு கொண்டு வந்து, சம்பந்தப்பட்ட கைதிகளிடம் சேர்த்தது, விசாரணையில் தெரிந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். வழக்கில் தொடர்புள்ள கைதிகளை கஸ்டடியில் எடுத்து, விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு காத்திருக்கின்றனர்.