/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி
/
சிறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி
ADDED : அக் 05, 2025 03:58 AM

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ஒரு ரவுடி, ஆப்பிள் மாலை அணிந்து, பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் முறைகேடு நடப்பது புதிய விஷயமல்ல. வி.ஐ.பி., கைதிகளுக்கு ராஜ உபசாரம் அளிப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சிறையில் சொகுசு வசதிகள், போதைப்பொருள், மொபைல் போன், பலவிதமான உணவு உட்பட, அனைத்தும் கிடைக்கின்றன.
நடப்பாண்டு ஜனவரி 28ம் தேதி, தொம்மசந்திராவின் சந்தை மைதானத்தில் முன்னாள் ரவுடி முசரி வெங்கடேசப்பாவை, சீனிவாஸ் என்ற குப்பாச்சி சீனா கொலை செய்தார். இவ்வழக்கில் கைதாகி, அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன் தினம், சிறையிலேயே கேக் வெட்டி தன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது அவர் ஆப்பிள் மாலை அணிந்திருந்தார். அவர் பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ, நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. அவரே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, மொபைல் போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனால் சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது உறுதியாகி உள்ளது.
சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், கைதி பிறந்த நாள் கொண்டாட முடியுமா, இது சிறையா, சொகுசு விடுதியா என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு முன்பு ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி, இதே சிறையில் இருந்தபோது, சிறை வளாகத்தில் இருக்கையில் அமர்ந்து, சிகரெட் பிடித்தபடி ரவுடி கைதிகளுடன் நடிகர் தர்ஷன் அரட்டை அடித்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளான சிறை அதிகாரிகள், தர்ஷனை பல்லாரி சிறைக்கு மாற்றினர்.
இப்போது ரவுடி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ, உள்துறைக்கு தலைவலியாகி உள்ளது.