ADDED : ஜூன் 07, 2026 11:27 PM

சுலிபெலே: வீட்டின் முன், ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டின் சுலிபெலே கிராமம், ஜனதா காலனியில் வசித்தவர் கலீம் உல்லா கான், 36; ரவுடி. இவர் மீது சுலிபெலே, ஹொஸ்கோட் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பது உட்பட பல வழக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:10 மணிக்கு, வீட்டின் முன் நின்று, மொபைல் போனில் கலீம் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு மூன்று ஆட்டோவில் வந்த எட்டு பேர் கும்பல், கலீமை சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. கத்தியாலும் குத்தினர்.
உடலில், 20 இடங்களில் விழுந்த வெட்டால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலையாளிகள் ஆட்டோவில் தப்பினர்.
பெங்களூரு ரூரல் எஸ்.பி., சந்திரகாந்த், சுலிபெலே போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். கலீம் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரை கொலை செய்தவர்கள் யார், என்ன காரணம் என தெரியவில்லை. முன்விரோதத்தில் எதிர் கும்பல் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
