குடிநீர் பிரச்னை தீர்க்க எம்.எல்.ஏ., தொகுதிகளுக்கு தலா ரூ.1 கோடி
குடிநீர் பிரச்னை தீர்க்க எம்.எல்.ஏ., தொகுதிகளுக்கு தலா ரூ.1 கோடி
ADDED : ஜூலை 10, 2026 12:32 AM
பெலகாவி: ''குடிநீர் பிரச்னை தீர்க்க, எம்.எல்.ஏ., தொகுதிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
பெலகாவியில் அவர் அளித்த பேட்டி:
அயோத்தி ராமர் கோவிலில் நடந்த முறைகேடு, ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் கர்நாடகாவில் நடக்க நாங்கள் விரும்பவில்லை. அறநிலைய துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் செலுத்தும் காணிக்கை; உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். மாநிலத்தில் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை அவசரமாக தீர்க்கும் வகையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ., தொகுதிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படும்.
நகர் புறங்களில் தண்ணீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணா, காவேரி, கோதாவரி, நதிகளை இணைக்க ஒரு மனதாக ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இது, வரலாற்று சிறப்புமிக்க முடிவு.
மத்திய அரசு 50 சதவீத உரம் மட்டுமே வழங்கி யுள்ளது. உரத்தை சேமித்து வைக்க அறிவுறுத்தி உள்ளேன். மீத உரத்தையும் கேட்டு வாங்குவோம். வாக்குறுதி திட்டங்கள் எந்த காரணத்திற்கும் நிறுத்தப்படாது. விவசாயிகள் வேளாண் காப்பிடு விஷயத்தில் மோசடி நடப்பதாக, எம்.எல்.ஏ.,க்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இடைத்தரகர்கள் பிரச்னை உள்ளதா என்பதை சரிபார்ப்போம். மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்ய வைக்கலாம் என, மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
