போராட்டத்துக்கு ரூ.1 லட்சம் கட்டணம் ஜி.பி.ஏ., முடிவால் பாழடையும் கட்டடம்
போராட்டத்துக்கு ரூ.1 லட்சம் கட்டணம் ஜி.பி.ஏ., முடிவால் பாழடையும் கட்டடம்
ADDED : ஆக 26, 2026 02:46 AM

பெங்களூரு: பெங்களூரு சுதந்திர பூங்காவில் உள்ள புதிய கட்டடத்திற்குள் போராட்டம் நடத்த, ஒரு லட்சம் ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயித்ததால், இக்கட்டடத்தில் போராட்டம் நடத்தும் பகுதி பாழடைந்து வருகிறது.
பெங்களூரில் மவுரியா சதுக்கம், பன்னப்பா பூங்கா, எம்.ஜி., சாலை காந்தி சிலை அருகில், டவுன் ஹால் முன் ஆகிய இடங்களில் பல சங்கங்கள், அமைப்புகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
உயர் நீதிமன்றம் இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒரே இடத்தில் போராட்டங்கள் நடத்தும் வகையில் இடத்தை தேர்வு செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
பெங்களூரு சேஷாத்திரிபுரம் சாலையில் 21 ஏக்கர் நிலப்பரப்பில், 16 ஏக்கர் நிலம் சுதந்திர பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 5 ஏக்கர் நிலம், ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்டது.
அதேவேளையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அப்போதைய பி.பி.எம்.பி., எனும் கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி, 5 ஏக்கர் நிலத்தில் பல அடுக்குமாடி கொண்ட வாகன நிறுத்தத்தை கட்டியது. இந்த கட்டடத்தின் முதல் மாடியில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தை, 2018ல் முதல்வராக இருந்த சித்தராமையா திறந்து வைத்தார்.
ஆனால், திறந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஒரு சில போராட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளன. ஏனெனில், போராட்டம் நடத்த ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
சமூக விரோதிகள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துபவர்களுக்கு, இவ்வளவு தொகை கட்ட வசதி இல்லை. எனவே, மழையிலும், வெயிலிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்துடன் பல ஆண்டுகளாக கட்டடம் பூட்டியே கிடப்பதால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறி உள்ளது. இது தொடர்பாக விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறுகையில், ''நிழல், கழிப்பறை வசதியுடன் கூடிய அந்த இடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை நிர்ணயம் செய்திருப்பது மிகவும் அதிகம்.
''ஜனநாயக போராட்டங்களையும், இயக்கங்களையும் அரசு புறக்கணிப்பது மன்னிக்க முடியாதது. போராட்டக்காரர்களுக்கு தண்ணீர், நிழல், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது, அரசின் கடமையாகும்,'' என்றார்.
