/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாகன அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையால் ரூ.10.37 கோடி வசூல்!: 2 நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு
/
வாகன அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையால் ரூ.10.37 கோடி வசூல்!: 2 நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு
வாகன அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையால் ரூ.10.37 கோடி வசூல்!: 2 நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு
வாகன அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையால் ரூ.10.37 கோடி வசூல்!: 2 நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு
ADDED : ஆக 26, 2025 03:01 AM

பெங்களூரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, மாநிலத்தில் 3.40 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பெங்களூரில் மட்டுமே 1.24 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதனால், நகரில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அருகில் இருக்கும் இடத்திற்கு வாகனங்களில் செல்வதற்கு கூட, பல மணி நேரம் செலவிட வேண்டிய சூழல் நிலவுகிறது.
ஏ.ஐ., கேமரா போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகளே அதிக அளவில் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். தவறான திசையில் பைக் ஓட்டுவது, நடைபாதை மீது பைக் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, பைக்கில் மூன்று பேர் அமர்ந்து செல்வது என பலவகையில் விதிகளை மீறி செயல்படுகின்றனர்.
இதை கண்காணிப்பதற்காக, சிக்னல்களில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
வாகனம் பறிமுதல் இது குறித்து, வாகன ஓட்டிகளின் மொபைல் போன் எண்ணுக்கு தகவல்கள் அனுப்பப்படுகிறது.
அபராதம் விதிக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்கள், ஆன்லைன் வழியாகவே அபராத தொகையை கட்டலாம். ஆனால், பலரும் அபராத தொகையை கட்டுவதில்லை.
இதுபோன்று, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள், போக்குவரத்து போலீசாரிடம் சிக்கும் போது, அவற்றை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதுபோன்ற நடைமுறைகளில் இருந்து வாகனத்தை பாதுகாக்க, வாகன ஓட்டிகளுக்கு மாநில அரசு சலுகைகளை வழங்கும்.
இதன்படி, பெங்களூரில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில், 50 சதவீதம் செலுத்தினால் போதும் என்ற சலுகை அவ்வப்போது வழங்கப்படும். இதுபோன்ற சலுகைகள், 2023ம் ஆண்டில் மூன்று முறை அறிவிக்கப்பட்டன.
மகிழ்ச்சி இதையடுத்து, ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின், மீண்டும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக கடந்த 20ம் தேதி மாநில போக்குவரத்து துறையின் இணை செயலர் புஷ்பா அறிவித்தார்.
அபராத தொகையை செலுத்த கடந்த 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இது, பிப்ரவரி 11, 2023க்கு முன்னால் விதிக்கப்பட்ட அபராதத்துக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, வாகன ஓட்டிகள் அபராத தொகையை போட்டி போட்டு கொண்டு செலுத்தி வருகின்றனர். முதல் நாளான 23ம் தேதி அன்று மட்டும் 1,48,417 வழக்குகளுக்கான அபராத தொகை செலுத்தப்பட்டது. இதன் மூலம், 4.18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் 24ம் தேதி மட்டும், 2,56,102 வழக்குகளுக்கான அபராத தொகை செலுத்தப்பட்டது. இதன் மூலம், 7.19 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. இரண்டு நாட்களில் மொத்தமாக, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 10.37 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவற்றின் மூலம், 1,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.