/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.17,000 கோடி முறைகேடு?: 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மீது அமலாக்க துறையில் புகார்
/
மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.17,000 கோடி முறைகேடு?: 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மீது அமலாக்க துறையில் புகார்
மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.17,000 கோடி முறைகேடு?: 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மீது அமலாக்க துறையில் புகார்
மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.17,000 கோடி முறைகேடு?: 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மீது அமலாக்க துறையில் புகார்
ADDED : ஏப் 10, 2025 05:15 AM

பெங்களூரு: மத்திய அரசின், அம்ருத் திட்டத்தில், 17,000 கோடி ரூபாய் நிதியை முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் பைரதி சுரேஷ், ரஹீம் கான், எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஆகியோர் மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத் துறையில் சமூக ஆர்வலரும், பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., முன்னாள் தலைவருமான என்.ஆர்.ரமேஷ் புகார் அளித்து உள்ளார்.
கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், ஊழல்கள் அதிக அளவில் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு வலு சேர்க்கும் வகையில், முதல்வர் சித்தராமையாவின் நிதி ஆலோசகரான பசவராஜ் ராயரெட்டியே, 'ஊழலில் கர்நாடகா நம்பர் ஒன்' என, நேற்று அதிரடியாக கூறினார்.
இந்நிலையில், மேலும் ஒரு குண்டை துாக்கி போடும் வகையில், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் வழங்கப்பட்ட 17,000 கோடி ரூபாய் நிதியில் முறைகேடு நடந்து உள்ளதாக, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., முன்னாள் தலைவரும், சமூக ஆர்வலருமான என்.ஆர்.ரமேஷ் நேற்று லோக் ஆயுக்தா, அமலாக்கத் துறையில் புகார் அளித்தார்.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ், நகராட்சி நிர்வாக அமைச்சர் ரஹீம் கான், காங்., - எம்.எல்.ஏ.,வும், கர்நாடக நகர்ப்புற நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவருமான வினய் குல்கர்னி, கர்நாடக நகர்ப்புற நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைமை பொறியாளர்கள் சந்திரப்பா, முத்துராஜண்ணா, ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், டி.எம்.ஏ., எனும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் இயக்குநர் பிரபுலிங் கவாலிகட்டி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
மொத்தம், 7,281 பக்கங்கள் உடைய இரண்டு பெரிய கோப்புகளுடன் லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். மேலும், இந்த ஊழல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மனோஹர் லால் கட்டார், லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., ஆகியோருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
பின், ரமேஷ் அளித்த பேட்டி:
அம்ருத் திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் வடிகால் கட்டுதல், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் வடிகால் வசதிகள், பசுமை மண்டலங்கள், பூங்காக்கள், நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நிதி வழங்குகிறது.
இத்திட்டத்திற்காக 2023- - 24, 2024 - -25 நிதியாண்டுகளில் 17,000 கோடி ரூபாய் நிதி கர்நாடகாவிற்கு வழங்கப்பட்டது. இதில் 75 சதவீதம் நிதி, கர்நாடக நகர்ப்புற நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கும், 25 சதவீதம் நிதி டி.எம்.ஏ.,க்கும் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2024 - -25 நிதியாண்டில் மட்டும் 8,990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 137 பணிகளுக்காக 5,800 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடந்து வருகின்றன. 93 பணிகளுக்காக, 3,190 கோடி ரூபாய் அளவிலான பணிகள் முடிக்கப்பட்டன என கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் இவற்றில் பாதி பணிகள் கூட முடிந்தபாடில்லை. பணிகள் முடிந்தது போன்ற போலி புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. பணிகள் முடிவடையாமலேயே நிதி வழங்கப்பபட்டு உள்ளது.
குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்கள் வழங்குவதன் மூலம் முறைகேடுகள் நடந்து உள்ளன. இதன் மூலம் அமைச்சர்கள் பைரதி சுரேஷ், ரஹீம் கான் ஆகியோர் 15 சதவீத கமிஷனும், வினய் குல்கர்னி 3 சதவீத கமிஷனும் சட்டவிரோதமாக பெற்று உள்ளனர்.
அம்ருத் திட்டத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிதியை கர்நாடக நகர்ப்புற நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைமை பொறியாளர்களான சந்திரப்பா, முத்துராஜண்ணா, நிர்வாக பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள், பேரூராட்சிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் என பலரும் மோசடி செய்து உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 17,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் பாதிக்கும் மேலான நிதியை அமைச்சர்கள் பைரதி சுரேஷ், ரஹீம் கான், எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஆகியோர் முறைகேடு செய்து உள்ளனர்.
மேலும், மாநிலத்தில் உள்ள 27 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இவர்கள், இந்த இரண்டு துறைகளிலும் உள்ள அதிகாரிகளை வைத்து, பணி செய்ததாக கூறி கணக்கு காட்டி பணத்தை மோசடி செய்து உள்ளனர்.
இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இது குறித்து முதல்வர் சித்தராமையாவிடமும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத் துறையிடமும் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு கூறினார்.

