ADDED : ஜூன் 19, 2026 01:15 AM

பெங்களூரு: ''நகரின் அனைத்து வார்டுகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த, 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது,'' என, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரிலுள்ள சாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கை அனைத்தும் முதல்வர் சிவகுமார் வழிகாட்டுதலின் படி தான் நிறை வேற்றப்படும்.
நகரில் ஐந்து மாநகராட்சிகளின் அனைத்து வார்டுகளில் உள்ள சாலைகளும் மேம்படுத்தப்படும். இதற்காக, 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி விடுவிக்கப்பட்டு உள்ளது. 5 மாநகராட்சிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளின் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
அடுத்த ஆறு மா தங்களுக்குள் சாலைகளை முழுமையாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பருவ மழையை தாங்கும் அளவுக்கு தரமான சாலைகள் அமைக்கப்படும். சாலையின் தரத்தில் சமரசம் கிடையாது.
அனுமதியின்றி சாலைகளில் பள்ளம் தோண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலை சீரமைப்பு பணிகள் நடக்கும் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.
பொது இடங்களில் குப்பை வீசுவோருக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். குப்பை வீசியவரே அதை சுத்தம் செய்ய வேண்டும். மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்து, மக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கு ம் குப்பை லாரிகள் சென்று, குப்பையை சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் சாலை, பொது இடங்களில் குப்பை வீசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இது, பெங்களூரின் அழகை நாசப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
