ADDED : ஜூன் 30, 2026 04:52 AM
பெங்களூரு: பெங்களூரில் பல இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், 25.23 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நைஜீரியா நாட்டின் மூவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரின் பைலகோனஹள்ளி, வாடகை வீட்டில் வசிக்கும் நைஜீரிய நாட்டின் மூன்று பேர், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நைஜீரியர்கள் வசித்த வீட்டில் சோதனை நடத்தினர். டிராலி பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 270 கிராம் மெத்தாம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு, 21 கோடி ரூபாய்.
மருத்துவ விசா நைஜீரியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அம்போமோ ஜான் விக்டர், 37, சிமி நுபுசி மோசஸ், 36, கரிகாரி எமோஸ், 33, என தெரிந்தது.
மருத்துவ சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்த மூன்று பேரும், விசா காலம் முடிந்தும் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லாமல் சட்டவிரோதமாக வசித்தனர்.
டில்லியில் வசிக்கும் நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி, கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்தனர். இவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு சிகரெட் இதுபோல எச்.பி.ஆர்., லே - அவுட்டில் வாடகை வீட்டில் வசித்த, கேரளாவின் முகமது உமருல் பாருல், 25, என்பவரையும், போதைப்பொருள் விற்றதாக சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் இருந்து, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர, ஆர்.எம்.சி., யார்டு, சுப்பிரமணிய நகர், மடிவாளா, திலக்நகர், ஒயிட்பீல்டு, யஷ்வந்த்பூர், ராஜாஜிநகர், இந்திராநகர் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்ற, 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து, 2.23 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
