UPDATED : அக் 14, 2026 12:00 AM
ADDED : அக் 13, 2026 11:36 PM
பெங்களூரு: காரில் கஞ்சா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்து, 3.17 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரின் மைசூரு சாலை வழியாக நேற்று அதிகாலையில், காரில் கஞ்சா கடத்தப்படுவதாக, கும்பலகோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக செயலில் இறங்கிய போலீசார், மைசூரு சாலைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார், போலீசார் தடுத்தும் நிற்காமல் சென்றது.
அந்த காரை விரட்டிய போலீசார், மைசூரு சாலையின், கம்பிபுராவின் ஈத்கா மைதானம் அருகில் வழிமறித்து, சுற்றி வளைத்து பிடித்தனர்.
காரில் சோதனையிட்ட போது, 317 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 3.17 கோடி ரூபாயாகும். கஞ்சாவை கடத்திய விஷ்ணு, 36, சாந்த் பாஷா, 31, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் கிடைத்த விபரங்கள்:
கைதான இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்கள் பெங்களூருக்கு வந்து, ஆர்.டி.நகரில் காரை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.
அந்த காரில் ஓடிஷா மாநிலத்துக்கு சென்று, குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கினர். அதை பெங்களூருக்கு கொண்டு வந்தனர். இருவரும் பொம்மசந்திராவில் உள்ள ஹோட்டலில் தங்கினர்.
கஞ்சாவை கேரளாவின் குமாரமங்கலத்துக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கும் நோக்கில் மைசூரு சாலை வழியாக கேரளாவுக்கு செல்லும் போது, போலீசாரிடம் சிக்கினர்.
