/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., ஆய்வு ஸ்டிக்கர் ஒட்ட ரூ.3.60 கோடி செலவு
/
எஸ்.சி., ஆய்வு ஸ்டிக்கர் ஒட்ட ரூ.3.60 கோடி செலவு
ADDED : ஜூலை 05, 2025 11:00 PM
பெங்களூரு: பெங்களூரில் எஸ்.சி., பிரிவினர் குறித்து ஆய்வு செய்து, ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக 3.60 கோடி ரூபாயை மாநகராட்சி செலவிட்டுள்ளது. மாநகராட்சி குளறுபடிக்கு, ஒரு அளவே இல்லையா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கர்நாடக பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் மூலமாக, இதற்கு முன்பு அரசு நடத்திய ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வறிக்கையை, எதிர்க்கட்சியினர் உட்பட, மடாதிபதிகள் ஏற்கவில்லை. இவர்களின் நெருக்கடிக்கு பணிந்த அரசு, எஸ்.சி., பிரிவினர் குறித்து ஆய்வு நடத்துவதாக அறிவித்தது.
இதன்படி அந்தந்த உள்ளாட்சிகள், ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக செல்கின்றனர். அங்கு வசிப்போரிடம் தகவல் கேட்டறியாமல், கதவு, வெளிப்புற சுவர்களில் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கின்றனர்.
ஒரு வீட்டில் ஆய்வு முடிந்துள்ளது என்பதை, அடையாளம் காணும் நோக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள், தகவல்களை பெறாமல் ஸ்டிக்கரை ஒட்டிச் செல்வதால், மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
ஸ்டிக்கர் ஒட்டுவதற்காகவே, 3.60 கோடி ரூபாயை மாநகராட்சி செலவு செய்துள்ளது. ஒரு ஸ்டிக்கருக்கு தலா ௫ ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள், 35 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு தலா ஒன்று வீதம், 35 லட்சம் ஸ்டிக்கர்கள் ஜாதி ஆய்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீதி நாடகங்கள் நடத்தவும் 49.59 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில், ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்ய, துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வழங்குவது, ஆய்வு செய்வது சமூக வலை தளங்களில் பிரசாரம் செய்வது, குறும்படம் தயாரிப்பது என, ஆய்வுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளனர்.
மக்களின் வரிப்பணத்தை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் பெங்களூரு மாநகராட்சி, ஜாதி ஆய்வு பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது. பணத்தை தண்ட செலவு செய்வது சரியா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.