/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர்களிடம் வாங்கிய சொகுசு கார்களுக்கு ரூ.38 லட்சம் வரி
/
நடிகர்களிடம் வாங்கிய சொகுசு கார்களுக்கு ரூ.38 லட்சம் வரி
நடிகர்களிடம் வாங்கிய சொகுசு கார்களுக்கு ரூ.38 லட்சம் வரி
நடிகர்களிடம் வாங்கிய சொகுசு கார்களுக்கு ரூ.38 லட்சம் வரி
ADDED : ஜூலை 24, 2025 06:52 AM

பெங்களூரு : நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கானிடம் இருந்து வாங்கிய, இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு, தொழிலதிபர் கே.ஜி.எப்.பாபு 38.26 லட்சம் ரூபாயை, சாலை வரி செலுத்தியுள்ளார்.
பெங்களூரு, சிக்பேட்டையை சேர்ந்தவர் யூசுப் ஷெரீப் என்கிற கே.ஜி.எப். பாபு. ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்கள் செய்து வருகிறார். 2021ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில், பெங்களூரு நகர தொகுதியில் இருந்து, எம்.எல்.சி., பதவிக்கு போட்டியிட்டு தோற்றார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் சிக்பேட்டில் போட்டியிட, காங்கிரஸ் 'சீட்' கிடைக்காதால், சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மகனுடன், மருமகளும் சேர்ந்து, தன் சொத்தை பறிக்க பார்ப்பதாக, சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இருந்து வாங்கிய, இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களுக்கு, சாலை வரி கட்டாமல், கே.ஜி.எப்.பாபு வரி ஏய்ப்பு செய்ததாகவும், வசந்த்நகரில் உள்ள அவரது பங்களாவில் இருந்து, இரண்டு கார்களையும் பறிமுதல் செய்ய, போலீசார் சென்று இருப்பதாகவும் நேற்று காலை செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து கே.ஜி.எப்.பாபு கூறுகையில், ''நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்திய, காரை செகண்ட் ஹேண்ட் ஆக வாங்குவதில், எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் பயன்படுத்திய, இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினேன்.
''அந்த கார்கள், மும்பையில் பதிவு செய்யப்பட்டவை. கார்களுக்கு வாழ்நாள் வரி கட்டப்பட்டு இருந்தது. ஆனால் கர்நாடகாவில் ஓட்ட, சாலை வரி கட்ட வேண்டும் என்று, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் என்னிடம் கூறினர்.
''சட்டத்தை மதிப்பவன் நான். வரி கட்ட தயாராக உள்ளேன். எந்த வரி ஏய்ப்பும் செய்யவில்லை,'' என்றார்.
கே.ஜி.எப்.பாபு வீட்டிற்கு சென்ற வட்டார போக்குவரத்து இணை ஆணையர் ஷோபா, ''இரண்டு கார்களுக்கும் கர்நாடக வரியாக 38.26 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும்,'' என்றார். உடனடியாக கே.ஜி.எப்.பாபு வரியை செலுத்தினார்.
பாபு வீட்டில் நின்ற கர்நாடக பதிவெண் கொண்ட காரின் கண்ணாடியில், முதல்வரின் அரசியல் செயலரும், எம்.எல்.சி.,யுமான நசீர் அகமதுவின் பெயர் கொண்ட பாஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் வந்ததும், பாபுவின் வீட்டில் வேலை செய்பவர்கள், கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருந்த பாஸை கிழித்தனர்.