/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.4 அதிகரிப்பு!: பால் விலையை உயர்த்தி மக்களுக்கு 'யுகாதி பரிசு' : 2 ஆண்டில் 3 முறை ஏற்றியதால் மக்கள் அதிர்ச்சி
/
ரூ.4 அதிகரிப்பு!: பால் விலையை உயர்த்தி மக்களுக்கு 'யுகாதி பரிசு' : 2 ஆண்டில் 3 முறை ஏற்றியதால் மக்கள் அதிர்ச்சி
ரூ.4 அதிகரிப்பு!: பால் விலையை உயர்த்தி மக்களுக்கு 'யுகாதி பரிசு' : 2 ஆண்டில் 3 முறை ஏற்றியதால் மக்கள் அதிர்ச்சி
ரூ.4 அதிகரிப்பு!: பால் விலையை உயர்த்தி மக்களுக்கு 'யுகாதி பரிசு' : 2 ஆண்டில் 3 முறை ஏற்றியதால் மக்கள் அதிர்ச்சி
ADDED : மார் 27, 2025 11:12 PM

பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. மாநிலத்தின் பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது.
கொள்முதல்
கே.எம்.எப்.,க்கு உட்பட்ட பல்வேறு பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் மூலம் பாலை கொள்முதல் செய்கிறது. இதை பதப்படுத்தி, 'நந்தினி' பெயரில் பல்வேறு வகையான பால், பால் பொருட்களாக விற்பனை செய்து வருகிறது.
தற்போது மாநிலத்தில் 26.84 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும், 8.90 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது, நாட்டிலேயே இரண்டாவது பெரிய பால் கூட்டுறவு சங்கமாகும்.
நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு ரூபாயில், 80 பைசாவுக்கும் மேல், தினமும் 28.60 கோடி ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில், கால்நடைகளுக்கு மருத்துவ சேவைகள், செயற்கை கருவூட்டல், தீவனம் வழங்குதல், தீவன மேம்பாட்டு பயிற்சி உட்பட பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு வசதியாக தீவனம் வெட்டும் இயந்திரம், பால் கறக்கும் இயந்திரம், ரப்பர் பாய் போன்ற உபகரணங்களும் வழங்கி வருகிறோம்.
சமீப காலமாக மக்காச் சோளம், அரிசி நெல், பருத்தி விதை, கால்நடை தீவனம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கனிமங்களின் விலை 35 முதல் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது. பசுக்களின் பராமரிப்பு செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், பால் கூட்டுறவு சங்கங்கள், 'நிர்வகிப்பு செலவு அதிகரிக்கிறது. எனவே, பால் விலையை உயர்த்த வேண்டும்' என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தன. முதல்வர் சித்தராமையாவும், அமைச்சரவையில் தீர்மானித்து அறிவிப்பதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
ஒப்புதல்
அதன்படி இன்று (நேற்று) முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை, 4 ரூபாய் உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த 2024 ஜூன் 26ம் தேதி, 500 மி.லி., பாலில் 50 மி.லி.,யும் 1 லிட்டர் பாலில், 50 மி.லி.,யும் அதிகரித்து, 2 ரூபாய் அதிகரித்து விற்கப்பட்டு வந்தது. இந்த உத்தரவை அரசு திரும்ப பெறுகிறது. இனி 500 மி.லி., 1 மி.லிட்டரில் பால் விற்பனை செய்யப்படும். 1 லிட்டர் பால் 4 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில் 2023ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, 1 லிட்டர் பால் விலையை, 3 ரூபாய் உயர்த்தியது. அதன் பின், 2024 ஜூனில் அரை லிட்டர், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டில் கூடுதலாக 50 மி.லிட்டர் அதிகரித்து, இரண்டு ரூபாய் உயர்த்தியது. தற்போது மூன்றாவது முறையாக லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனால், பொதுமக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.