மத்திய பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5,300 கோடி வந்து சேரவில்லை: முதல்வர் சித்து தகவல்
மத்திய பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5,300 கோடி வந்து சேரவில்லை: முதல்வர் சித்து தகவல்
ADDED : ஏப் 14, 2026 06:05 AM

சிக்கமகளூரு: ''பத்ரா மேலணை திட்டத்துக்கு, 2023 - 24 மத்திய பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்தும் அந்த நிதி இதுவரை வந்து சேரவில்லை,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சிக்கமகளூரில் பத்ரா அணை நீர்த்தேக்க பகுதியில் ஹண்டுர் கிராமம் மற்றும் நரசிம்மராஜபுராவை இணைக்கும் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை, நேற்று முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.
அத்துடன், பல்வேறு பணிகளுக்கான திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
மைசூரு ராஜா நரசிம்மராஜ உடையார் காலத்தில், கிராமமாக இருந்த இப்பகுதிக்கு நரசிம்மராஜபுரா என்று பெயரிடப்பட்டது. இப்பகுதி வளர்ச்சிக்காக இங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியதால், இப்பாலம் கட்டுவது சாத்தியமானது. சாலை விரிவாக்கம், தடுப்பணை, பாலம் கட்டுதல், சுற்றுலா உட்பட பல்வேறு கோரிக்கைகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
வளர்ச்சி பணிகளுக்கு பணம் இல்லை என்றும், வாக்குறுதி திட்டங்களுக்கு பின், கருவூலம் காலியாக உள்ளது என்றும், வளர்ச்சி என்பதே இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், எங்கள் அரசு, வாக்குறுதியுடன் சேர்த்து வளர்ச்சியை சாத்தியமாக்கி உள்ளது. பொதுநலனை நோக்கமாக கொண்ட அரசின் வாக்குறுதி திட்டங்கள் செயல்பட்டபோதும், மத்திய அரசை விட, மாநில அரசின் நிதி நிலைமை சிறப்பாக உள்ளது.
'அரசியல் சுதந்திரம் வெற்றி பெற, பொருளாதாரம், சமூக, கல்வி சுதந்திரம் அவசியம்' என்று அம்பேத்கர் கூறியிருந்தார். அவரின் சிந்தனை குறித்து எதிர்க்கட்சியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எங்கள் அரசு இதுவரை, வாக்குறுதி திட்டங்களுக்காக, 1.30 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது. மாநில அரசின் வாக்குறுதிகளை பா.ஜ.,வினர் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், மற்ற மாநிலங்களும் இத்திட்டங்களை பின்பற்றுகிறது.
கடந்த 2023 - 24 மத்திய பட்ஜெட்டில், பத்ரா மேலணைத்திட்டத்துக்கு, 5,300 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. இதுவரை அந்த நிதி வந்து சேரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
