பெங்., விமான நிலையத்தில் ரூ.8 கோடி கஞ்சா பறிமுதல்
பெங்., விமான நிலையத்தில் ரூ.8 கோடி கஞ்சா பறிமுதல்
ADDED : பிப் 10, 2026 04:40 AM
தேவனஹள்ளி: பெங்களூரு விமான நிலையத்தில், எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா சிக்கியது. பயணியர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் இருந்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று விமானம் வந்தது. விமானத்தில் பயணித்த பயணியரில் இருவர், கஞ்சா கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பயணியர் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தினர். இரு பயணியர் தங்கள் உடைமைகளில் மறைத்து, உயர்ரக கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த சுங்கத்துறையினர் 8.31 கோடி ரூபாய் மதிப்பிலான 23.76 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல பெங்களூரில் இருந்து வெளிநாட்டிற்கு, வெளிநாட்டு பணம், வைர நகைகளை கடத்த முயன்ற பயணி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 16,77,487 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ஒரு கோடியே, 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
