ரூ.8 லட்சம் லஞ்சம்: பெங்களூருவில் ஜிஎஸ்டி அதிகாரி சிக்கினார்
ரூ.8 லட்சம் லஞ்சம்: பெங்களூருவில் ஜிஎஸ்டி அதிகாரி சிக்கினார்
ADDED : செப் 18, 2026 04:01 PM

பெங்களூரு: இடைத்தரகர் வாயிலாக 8 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி அதிகாரியை கர்நாடக மாநில லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
தெற்கு கமிஷனரகம் சப் டிவிஷன் 04 ல் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஆக பணியாற்றுபவர் மோகித் பிரதாப் சிங்.
இரும்பு பொருள் தொடர்புடைய வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு தீர்வு கேட்டு பிரதாப் மோகித் சிங்கை அந்த வர்த்தகர் அணுகினார். இந்த வழக்கு பொய் என்பது மோகித் பிரதாப் சிங்கிற்கும் தெரிந்தும் அதனை முடித்து வைக்க 20 லட்ச ரூபாய் லஞ்சம்கேட்டார்.
பின்னர் பேரம் பேசி 8 லட்ச ரூபாய் தர வேண்டும் எனவும், அதை தனது இடைத்தரகர் சல்மான் ஷேக்கிடம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த வர்த்தகர், லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து மோகித் பிரதாப் சிங் மற்றும் சல்மான் ஷேக் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆலோசனையின்படி, சல்மானிடம் லஞ்சப்பணத்தை வர்த்தகர் கொடுத்தார்.
இதன் பிறகு சல்மான், அந்தப்பணத்தை மோகித் பிரதாப் சிங்கிடம் அளித்தார். அப்போது இருவரையும் லோக்ஆயுக்தா போலீசார் கையும் களவுமாக கைது செய்து பெங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.
