ரூ.100 கோடி மோசடி ஐஸ்வர்யா கவுடாவின் தில்லாலங்கடி அம்பலம்
ரூ.100 கோடி மோசடி ஐஸ்வர்யா கவுடாவின் தில்லாலங்கடி அம்பலம்
ADDED : மார் 27, 2026 05:30 AM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, மோசடியில் ஈடுபட்ட ஐஸ்வர்யா கவுடா, பலரை ஏமாற்றி, 100 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பது, சி.ஐ.டி., விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மாண்டியாவின் மலவள்ளி ஹிரேகாவலு கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 35. தற்போது, பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் இவர், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, சந்திரா லே - அவுட்டில் உள்ள நகைக்கடையில் எட்டு கோடி ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்தார். நகைக்கடை உரிமையாளர் வனிதா அளித்த புகாரில், 2025 டிசம்பர் 28ம் தேதி ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் மேலும் பல நகைக்கடைகளிலும், சுரேஷின் தங்கை என்று கூறி, நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரிய வந்தது. நிலம் வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கியும் ஏமாற்றியுள்ளார்.
இந்த வழக்கை கர்நாடக அரசு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தது. சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஐஸ்வர்யா ஈடுபட்டது தெரிந்ததால், அமலாக்கத்துறையும் விசாரித்தது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையில், சிறையில் இருந்து ஜாமினில் ஐஸ்வர்யா வெளியே வந்தார். சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுரேஷ் பெயரை பயன்படுத்தி பலரை ஏமாற்றி, ஐஸ்வர்யாவும், அவரது கணவர் ஹரிஷும் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும் ஐஸ்வர்யா, நவ்யஸ்ரீ என்ற பெயர்களில், ஆதார் அட்டை தயாரித்து அதில் தந்தையின் பெயர்கள், பிறந்த தேதியை மாற்றியதுடன், கன்மேன்களை பாதுகாப்புக்கு வைத்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சி.ஐ.டி., அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் ஐஸ்வர்யாவை கைது செய்ய, சி.ஐ.டி., முயற்சி செய்கிறது. சுரேஷ் குரலில் பேசி, ஐஸ்வர்யா செய்த மோசடிக்கு உடந்தையாக இருந்த நடிகர் தர்மாவின் குரல் மாதிரியும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வில் தர்மாவின் குரல் உறுதி செய்யப்பட்டால், அவரும் கைதாகும் வாய்ப்பு உள்ளது.
