ADDED : ஜன 28, 2026 06:49 AM
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது, 'ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம். இந்நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, ஏ.டி.எம்., இயந்திரங்களில் நிரப்பும் வேலையை செய்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், நிறுவனத்தில் ஆண்டு கணக்கு தணிக்கை நடந்தது.
அப்போது, கணக்கில், 1.38 கோடி ரூபாய் விடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை அதிகாரி மிதுன், நிறுவன ஊழியர்களிடம் விசாரித்த போது, ஏ.டி.எம்.,களுக்கு நிரப்ப எடுத்து சென்றதில், 1.38 கோடி ரூபாயை, இரண்டு ஊழியர்கள் சுருட்டியதும், அந்தப் பணம் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இரண்டு குழு இதுபற்றி கடந்த, 24ம் தேதி மிதுன் அளித்த புகாரில், நிறுவனத்தில் பணியாற்றிய பிரவீன், தனசேகர், ராமக்கா, ஹரிஷ்குமார், பிரவீன்குமார், வருண் ஆகிய ஆறு பேர் மீது, கோரமங்களா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள ஆறு பேரையும் போலீஸ் தேடுகிறது. மிதுன் கூறுகையில், ''வங்கிகளில் இருந்து ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்ப எடுத்துச் செல்லும் போது, ஏ.டி.எம்.,களில் நிரப்பியது போக மீதி பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள் ஆறு பேர், தவறான கணக்கு காட்டி கடந்த ஆறு மாதங்களில், 1.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர். அவர்களில் ஒரு குழுவினர், 58 லட்சம் ரூபாயையும்; இன்னொரு குழுவினர், 80 லட்சம் ரூபாயையும் கையாடல் செய்துள்ளனர். இவர்களுக்கு நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் யாராவது உதவினார்களா என்று தெரியவில்லை. போலீஸ் விசாரணையில் உண்மை தெரியவரு ம்,'' என்றார்.
பிடி இறுகுமா? பெங்களூரில் கடந்த ஆண்டு நவம்பர், 19ம் தேதி, ஏ.டி.எம்.,களுக்கு நிரப்ப வேனில் கொண்டு செல்லப்பட்ட 7.11 கோடி ரூபாய், பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீஸ்காரர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர், ஏ.டி.எம்.,க்களுக்கு பணம் நிரப்பும் சி.எம்.எஸ்., என்ற நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள்.
பல கோடி ரூபாய் பணத்தை, ஏ.டி.எம்., இயந்திரங்களில் நிரப்ப, தனியார் நிறுவனங்களை நம்பியே வங்கிகள் கொடுக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் பணத்தை கொள்ளையடிப்பது, ஆட்டையை போடும் சம்பவங்கள் நடப்பதால், தனியார் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பித்து உள்ளது. பணம் இருக்கும் வாகனங்களை ஓட்டுவோரில் பெரும்பாலோனார், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், டிரைவர்கள் மீது நிறுவனங்கள் ஒரு கண் வைக்க வேண்டும்; ஊழியர்களை கண்காணிப்பதுடன், அடிக்கடி கணக்கு தணிக்கையும் நடத்த வேண்டும் என்றும், பெங்களூரு போலீஸ் கூறி உள்ளது.
இதையடுத்து ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பிடி இறுகுமா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

