/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விதான் சவுதா சுற்றுலாவுக்கு ரூ.150?
/
விதான் சவுதா சுற்றுலாவுக்கு ரூ.150?
ADDED : ஏப் 23, 2025 07:06 AM

பெங்களூரு : 'விதான் சவுதாவை சுற்றி பார்ப்பதற்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம்' என, சுற்றுலா துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த கட்டணத்தை குறைக்கும்படி, அதிகாரிகளுக்கு சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூருக்கு வரும் சுற்றுலா பயணியர், விதான் சவுதா முன் நின்று புகைப்படம் எடுக்காமல், அவரவர் ஊர்களுக்குத் திரும்புவதில்லை.
கலைநயமிக்க மாநிலத்தின் தலைமை செயலக கட்டடத்தை உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் வியந்து பார்க்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை மின் விளக்கு அலங்காரத்தில் விதான் சவுதா ஜொலிக்கிறது. இதை பார்க்கவும் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
இதனால் விதான் சவுதாவை சுற்றிப்பார்ப்பது, சுற்றுலா வழிகாட்டியை நியமிப்பது தொடர்பாக, அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுற்றுலா துறைக்கு சபாநாயகர் காதர் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக அறிக்கை தயாரித்த சுற்றுலாத் துறையினர், மாநில தலைமை செயலர் ஷாலினியிடம் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், 'சுற்றுலா பயணியர் நுழைவு கட்டணமாக ஒருவருக்கு 150 ரூபாய் வசூலிக்கலாம்' என குறிப்பிட்டிருந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் காதர், நுழைவு கட்டணத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக மாநில தலைமை செயலருடன் ஆலோசனை நடத்தும்படி, சுற்றுலா துறைக்கு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சபாநாயகர் காதர் கூறுகையில், ''விதான் சவுதாவை சுற்றிப்பார்க்க நுழைவு கட்டணமாக, 150 ரூபாய் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு பதிலாக, 20 முதல் 50 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க அறிவுறுத்தி உள்ளேன். இது தொடர்பாக மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதி உள்ளேன்,'' என்றார்.

