ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு
ADDED : மே 17, 2026 12:37 AM

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரும், தமிழருமான ருத்ரேசை கொலை செய்த வழக்கில், சிறையில் உள்ள இர்பான் பாஷா, மறைந்த தன் சகோதரியின் 40வது நாள் காரியத்தில் பங்கேற்க தாக்கல் செய்த ஜாமின் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு சிவாஜி நகரில் வசித்து வந்தவர் ருத்ரேஷ். தமிழரான இவர், ஆர்.எஸ்.எஸ்.,சில் தீவிர செயல்பாட்டாளராக இருந்தார். 2016ல் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியை முடித்து கொண்டு, தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர், ருத்ரேசின் கழுத்தில் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
குற்றப்பத்திரிகை ஜெயராம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கமர்ஷியல் தெரு போலீசார் இர்பான் பாஷாவை கைது செய்தனர்.
விசாரணைக்கு பின், அவர் மீது கொலை, ஆயுத சட்டம் மற்றும் சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், மார்ச் 30ம் தேதி இர்பானின் சகோதரி ஷாஹேதா யாஸ்மின் காலமானார். இந்த சந்தர்ப்பத்தில் இர்பானுக்கு, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் மூன்று நாள் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது. இதை தொடர்ந்து 40வது நாள் காரியத்தில் பங்கேற்க, மூன்று நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கும்படி, மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இர்பான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதிகள் சச்சின் சங்கர் மகடம், ராஜேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
கடும் குற்றச்சாட்டு என்.ஐ.ஏ., தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரர் மீதான வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையான தன்மை உடையவை. இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டால், அவர் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது' என்றார்.
இதற்கு நீதிபதிகள், 'விசாரணை நீதிமன்றம், மனுதாரருக்கு ஏற்கனவே மூன்று நாட்கள் ஜாமின் வழங்கியிருந்தது. மேலும், மனுதாரரின் ரேஷன் அட்டையை ஆய்வு செய்ததில் இறந்தவருக்கு சடங்குகள், பிரார்த்தனைகள் செய்ய வீட்டில் வேறு நபர்களும் உள்ளனர். எனவே, என்.ஐ.ஏ., தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்று, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றனர்.
