/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஸ்மார்ட் மீட்டர்' குறித்து மேல்சபையில்... காரசாரம்!; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதம்
/
'ஸ்மார்ட் மீட்டர்' குறித்து மேல்சபையில்... காரசாரம்!; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதம்
'ஸ்மார்ட் மீட்டர்' குறித்து மேல்சபையில்... காரசாரம்!; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதம்
'ஸ்மார்ட் மீட்டர்' குறித்து மேல்சபையில்... காரசாரம்!; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதம்
ADDED : ஆக 12, 2025 06:50 AM

கர்நாடகாவில் மின் இணைப்புக்கு பொருத்தும் சாதாரண மீட்டர்களை, ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றுவதை, அரசு கட்டாயமாக்கியுள்ளது. புதிதாக இணைப்பு பெறுவோருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. பெஸ்காம், மின் வாடிக்கையாளர்களின் மீட்டர்களை, ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றுகிறது. பல இடங்களில் பணிகள் முடிந்துள்ளன.
இதற்காக டெண்டர் அழைத்து, ஸ்மார்ட் மீட்டர் வாங்கியதில், மின் துறையில் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்மார்ட் மீட்டரின் விலையை விட, பல மடங்கு அதிகமான பணம் கொடுத்து வாங்கியுள்ளனர் என, கடந்த மே மாதம், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் முறைகேடு விஷயம் நேற்று மேல்சபையில் எதிரொலித்து, ஆளுங்கட்சி,எதிர்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் நடந்தது. மேல்சபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ.,-ரவி: மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் விலையில், ஏற்றத்தாழ்வு தென்படுகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், நமது மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களின் விலை அதிகம். இதற்கு என்ன காரணம். ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் குறைந்த விலைக்கு வழங்குகின்றனர்.
நமது மாநிலத்தில் பல மடங்கு விலை அதிகம். தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் வழங்குகிறீர்களா. மற்ற மாநிலங்களில் விலை குறைவாக இருக்கும் போது, நமது மாநிலத்தில் விலை அதிகம் இருப்பதற்கு என்ன காரணம். கொள்ளையடிக்க நீங்கள் லைசென்ஸ் அளித்துள்ளீர்களா. இது பகல் கொள்ளை இல்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
ரவியின் குற்றச்சாட்டுக்கு, தலைமை கொறடா சலீம், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐவான் டிசோசா, நாகராஜு உட்பட பலர் ஆட்சேபனை தெரிவித்தனர். 'நீங்கள் பயன்படுத்திய வார்த்தையை வாபஸ் பெறுங்கள். நீங்கள் தான் கொள்ளையடித்து, தற்போது எதிர் வரிசையில் அமர்ந்துள்ளீர்கள். பயன்படுத்தும் வார்த்தைகள், சரியாக இருக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
அப்போது ரவிக்கு ஆதரவாக, எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, ரவிகுமார் உட்பட, பலர் நின்றனர். ' ஸ்மார்ட் மீட்டர் விஷயத்தில், பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட, நமது மாநிலத்தில் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும்,' என வலியுறுத்தினர்.
இந்த கட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, கடுமையான வாக்குவாதம் நடந்தது. சபையில் குழுப்பமான சூழ்நிலை உருவானது.
மின் துறை அமைச்சர் ஜார்ஜ்: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய அரசே உத்தரவிட்டது. இத்திட்டத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கியது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
கிராம பஞ்சாயத்துகள், மின் வினியோக நிறுவனங்களுக்கு, 10,000 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. பல பஞ்சாயத்துகள் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. எனவே நாங்களே 5,000 கோடி ரூபாய் செலுத்தினோம். அனைத்தும் விதிமுறைப்படியே நடக்கின்றன. எந்த முறைகேடும் நடக்கவில்லை.
காங்., - நாகராஜ்: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம், தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இதை பற்றி இங்கு விவாதித்தால், நீதிமன்ற அவமதிப்பாகும்.
அப்போதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். குழுப்பமான சூழ்நிலை உருவானது. இதனால் கடுப்படைந்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தலையிட்டு,'இதே போன்று உறுப்பினர்கள் நடந்து கொண்டால், சபை கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டி வரும்' என எச்சரித்தார். அதன்பின் உறுப்பினர்கள் கப்சிப் ஆகி இருக்கையில் அமர்ந்தனர்.