/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாதுகாப்பான தீபாவளி: முதல்வருக்கு கடிதம்
/
பாதுகாப்பான தீபாவளி: முதல்வருக்கு கடிதம்
ADDED : செப் 07, 2025 10:49 PM
பெங்களூரு : பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவதை வலியுறுத்தி முதல்வர், துணை முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் அடங்கிய அமைப்பினர் கடிதம் எழுதி உள்ளனர்.
தொட்டபல்லாபூரில் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கும் போது, ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்தார். பத்து பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்து பொது சுகாதார நடவடிக்கை குழு, நம்ம பெங்களூரு அறக்கட்டளை, கேர் அமைப்பு ஆகிய சமூக ஆர்வலர்கள் அடங்கிய அமைப்பினர்கள் ஒன்றிணைந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கடிதத்தில், 'அடுத்த மாதம் 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசுகள் வெடிக்கப்படும் போது விபத்து, மாசு ஏற்படக்கூடாது. இதற்காக நகரில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளின் படியே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். அனுமதியின்றி சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் வெடி விபத்துகள் நடப்பது தடுக்கப்படும். இதில், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனகூறப்பட்டுள்ளது.