சேலம் பெண் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு கணவர் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை
சேலம் பெண் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு கணவர் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை
ADDED : மார் 31, 2026 04:39 AM

பெங்களூரு: சேலம் பெண் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், கணவர் உட்பட 7 பேர் மீது 495 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் செல்வ பாலமுருகன், 41. பெங்களூரு ஒயிட்பீல்டில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். இவரது மனைவி புவனேஸ்வரி, 39. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் ஒயிட்பீல்டில் வசித்தனர்.
மனைவி நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர். மகன், மகளுடன் மாகடி ரோடு சோலுார்பாளையாவில் புவனேஸ்வரி தனியாக வசித்தார். தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை செய்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற புவனேஸ்வரியை, செல்வ பாலமுருகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். அவரை மாகடி ரோடு போலீசார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி உத்தர பிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த அபிமன்யு சிங், தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த ரவுடிகள் மவுலேஷ் குமார், பெரியசாமி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு 24வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மாகடி ரோடு போலீசார் நேற்று 495 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதில் செல்வ பாலமுருகன், அபிமன்யு சிங், மவுலேஷ் குமார், பெரியசாமி, இவர்கள் கூட்டாளிகள் ராகுல், ஹரிஷ், சூர்யா என 7 பேர் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.
மனைவியின் நடத்தையில் சந்தேகம், விவாகரத்து கேட்டு மனைவி அனுப்பிய நோட்டீசால் கோபம், புவனேஸ்வரியை கொலை செய்ய ரவுடிகள் உதவியுடன், அபிமன்யு சிங்கிடம் இருந்து கணவர் துப்பாக்கி வாங்கியது பற்றியும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
துப்பாக்கியால் சுடும் போது குறிதப்பி புவனேஸ்வரி உயிர் தப்பினால், கத்தியால் அவரை குத்தி கொல்ல கணவர் இரண்டாவது திட்டம் வைத்திருந்ததும், ஒரு மாதத்திற்கு முன்பே கத்தியை வாங்கியது பற்றியும், தங்கள் விசாரணையில் தெரிந்ததாக போலீஸ் தரப்பு குறிப்பிட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள 3 பேரை தேடுவதாகவும் கூறி உள்ளனர்.
