கர்நாடக மாநிலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
ADDED : மே 19, 2026 11:33 PM

பெங்களூரு: பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால், பெங்களூரில் தற்போது மின்சார ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதன் விற்பனை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
மேற்காசிய பிராந்தியத்தில், போர் மூண்டதன் விளைவாக, இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை, நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. சூழ்நிலையை விவரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி, ஆலோசனை கூறினார்.
இதன்படி பல, முக்கிய பிரமுகர்கள் சொந்த வாகனத்தை தவிர்த்து விட்டு, மெட்ரோ ரயில், அரசு பஸ்களில் பயணிக்க துவங்கியுள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடகாவில் டீசல் விலை, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில், மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, பெங்களூரில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ராஜாஜிநகர் உட்பட, பல இடங்களில் உள்ள பைக் ஷோரூம்களில், மின்சார ஸ்கூட்டர் குறித்து தகவல் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிட்டால், மின்சார வாகனங்களின் நிர்வகிப்பு செலவு குறைவு. எரிபொருள் தேவையில்லை. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டால், நிம்மதியாக பயணிக்கலாம்.
பொது மக்களின் வசதிக்காகவே பல இடங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. இதை மனதில் கொண்டு, பலரும் மின்சார வாகனங்களுக்கு மாறுகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக, மின்சார ஸ்கூட்டர், பைக்குகளை புக்கிங் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிதாக மின்சார பைக்குகள், ஸ்கூட்டர்கள் தயாரித்து, பல முன்னணி நிறுவனங்கள் விட்டுள்ளன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. இதுவும் விற்பனை அதிகரிக்க காரணமாகும்.
