/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.ஆர்.எஸ்., அணையில் 30ல் சமர்ப்பண பூஜை
/
கே.ஆர்.எஸ்., அணையில் 30ல் சமர்ப்பண பூஜை
ADDED : ஜூன் 28, 2025 12:25 AM

மாண்டியா : ஏறக்குறைய 84 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் முழுமையாக நிரம்பி வழியும் கே.ஆர்.எஸ்., அணையில் வரும் 30ம் தேதி, முதல்வர் சித்தராமையா சமர்ப்பண பூஜை செய்கிறார்.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீர், பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், கர்நாடகா - தமிழக விவசாயிகள் உயிர்நாடியாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் கர்நாடகாவில் ஜூன் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் கனமழையால் கே.ஆர்.எஸ்., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் அணை நிரம்பும். இதுதான் வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்திலேயே துவங்கியது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., கொண்ட அணையில் நேற்று நீர் இருப்பு 44.32 டி.எம்.சி.,யாக இருந்தது.
அணைக்கு நேற்று விநாடிக்கு 52,829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 51,110 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அணை நிரம்பும்போது, முதல்வர் சமர்ப்பண பூஜை செய்வது வழக்கம். ஆனால் பல அரசு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இருந்ததால், சித்தராமையால் கே.ஆர்.எஸ்., அணைக்கு வர முடியவில்லை.
உண்மையில் அணை, நான்கு நாட்களுக்கு முன்பே முழு கொள்ளளவை எட்டிவிட்டதாகவும் முதல்வரின் வருகைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்து, அணை நிரம்பவில்லை என்று கணக்கு காட்டப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது முதல்வர் வருகை தேதியை முடிவு செய்த பின், 30ம் தேதி கே.ஆர்.எஸ்.,சில் சமர்ப்பண பூஜை செய்ய அதிகாரிகள் நாள் குறித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகின்றன. சமர்ப்பண பூஜை நடக்க உள்ளதால், அணையில் இருந்து இன்றும், நாளையும் நீர்திறப்பு குறைக்கப்பட உள்ளது.
ஜூன் மாதத்தை பொருத்தவரையில், 1941ம் ஆண்டு, ஜூன் 21ம் தேதி கே.ஆர்.எஸ்., அணை முழுமையாக நிரம்பி இருந்தது. தற்போது 84 ஆண்டுகள் கழித்து இந்த மாதத்தில் முழுமையாக நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.