/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தாயான சரஸ்வதி
/
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தாயான சரஸ்வதி
ADDED : செப் 07, 2025 10:44 PM
மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம், ஆர்வம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் சேவை செய்யலாம். பலர் தங்களின் சமூக சேவையால், அடையாளம் காணப்படுகின்றனர். இவர்களில் சரஸ்வதி சந்திரசேகரும் ஒருவர். இவர் தன்னலமற்ற சேவைக்காக, பல விருதுகளை பெற்றுள்ளார்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு நகரின் ஆர்.பி.சாலையின் மூன்றாவது கிராசில் வசிப்பவர் சரஸ்வதி சந்திரசேகர், 60. இவர் சமூக சேவையில், ஆர்வம் கொண்டவர். பொது சேவைகளில் ஈடுபட்டுள்ளார். தன் வீட்டுக்கு பசி என யார் வந்தாலும் அன்னமிடாமல் அனுப்பியதில்லை.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவர், சிறார்களின் கல்விக்கு பல உதவிகளை செய்துள்ளார். உடல் நிலை பாதித்தோர், முதிய தம்பதியருக்கு உதவி செய்து வருகிறார். நஞ்சன்கூடில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, அவ்வப்போது உணவு வழங்குவது வழக்கம்.
இவரை ஆட்டோ ஓட்டுநர்கள் அன்போடு அம்மா என, அழைக்கின்றனர். 'ஆட்டோ அம்மா' என்றே பிரசித்தி பெற்றுள்ளார்.
சரஸ்வதி சந்திரசேகரின் சேவையை அடையாளம் கண்டு, பல்வேறு சங்கங்கள் இவருக்கு, விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
நம்மூர ஹெம்மய கன்னடதி விருது, மாநில அளவிலான கித்துார் ராணி சென்னம்மா, ஸ்ரீராம ரக்ஷா விருது, கர்நாடக சுபுத்ரி, குவெம்பு விருதுகள், அசோகர் விருது, கர்நாடக சேவா, கோல்டன் ஸ்டார், ஜெய் பீம், கெம்பேகவுடா விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர்களை தன் பிள்ளைகள் போன்று பார்த்து கொள்கிறார். அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான உதவிகளை செய்கிறார்.
இது போன்ற சமூக பணிகளை சிறப்பிக்கும் வகையில், பெங்களூரின் இன்டர்நேஷனல் கல்ச்சர் ரிசர்ச் யூனிவர்சிட்டி, சமீபத்தில் அவருக்கு, 'டாக்டரேட்' பட்டம் அளித்து கவுரவித்துள்ளது. அது மட்டுமின்றி 'ரியாலிடி ஸ்போர்ட்ஸ் அகாடமி' அமைப்பு, சரஸ்வதி சந்திரசேகருக்கு, 'ரியாலிடி புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்' விருது வழங்கியது.
நாம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என, சுயநலமாக நடந்து கொள்ளும் இந்த சூழ்நிலையில், மற்றவருக்கு உதவுவதை, தன் வாழ்க்கை லட்சியமாக நினைத்து வாழும் சரஸ்வதி சந்திரசேகர், அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்கிறார்.
- நமது நிருபர் -