காங்., தலைவராக சதீஷுக்கு தகுதி உள்ளது: எம்.பி.பாட்டீல்
காங்., தலைவராக சதீஷுக்கு தகுதி உள்ளது: எம்.பி.பாட்டீல்
ADDED : ஏப் 30, 2026 11:53 PM

பெங்களூரு: ''பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு, மாநில காங்கிரஸ் தலைவராக, அனைத்து தகுதிகளும் உள்ளன,'' என, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, ஆளுமைத்திறன் உள்ளவர். தலைமை குணமும் அவரிடம் உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக, அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது.
அவர் ஏற்கனவே தலைவர் பதவி குறித்து, மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதி முடிவை மேலிடம்தான் எடுக்க வேண்டும். கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்த, அனைவருக்கும் அதிகாரம் உள்ளது. தலைமை குறித்து தினமும் விவாதங்கள் நடக்கின்றன.
காங்கிரசில் கட்சி மேலிடமே சுப்ரீம் ஆகும். அவர்களின் முடிவே இறுதியானது. இதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். எங்களுக்குள் எந்த குழப்பங்களும் இல்லை. துணை முதல்வர் சிவகுமார், கட்சியை பலப்படுத்தியது உண்மைதான்.
காங்கிரசுக்கு சித்தராமையாவின் தலைமை, சிவகுமாரின் சாதுர்யம் என, இரண்டுமே அவசியம். இவர்கள் மட்டுமின்றி, கட்சியின் வெற்றிக்காக, சாதாரண தொண்டர்கள், பூத் ஏஜென்டுகளும் உழைத்துள்ளனர்.
லிங்காயத் சமுதாயம், இம்முறை காங்கிரசுக்கு ஆதரவாக நின்றுள்ளது. முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டீலுக்கு பின், இப்போது 35க்கும் மேற்பட்ட லிங்காயத் எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். சூழ்நிலைக்கு தகுந்தபடி, மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
