/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சவுஜன்யாவை கொலை செய்தது அவரது மாமா சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா 'பகீர்'
/
சவுஜன்யாவை கொலை செய்தது அவரது மாமா சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா 'பகீர்'
சவுஜன்யாவை கொலை செய்தது அவரது மாமா சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா 'பகீர்'
சவுஜன்யாவை கொலை செய்தது அவரது மாமா சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா 'பகீர்'
ADDED : செப் 09, 2025 05:12 AM

மங்களூரு: 'கல்லுாரி மாணவி சவுஜன்யாவை கொலை செய்தது, அவரது மாமா விட்டல் கவுடா' என, மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா 'பகீர்' தகவல் கூறி உள்ளார்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா உஜ்ரேயை சேர்ந்தவர் சவுஜன்யா, 17; கல்லுாரி மாணவி. கடந்த 2012ம் ஆண்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது.
சந்தோஷ் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். குற்றமற்றவர் என்று கூறி, 2023ல் அவரை நீதிமன்றம் விடுவித்தது. சவுஜன்யாவை கொன்ற உண்மையான குற்றவாளி யார் என்று கண்டறிய, மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று பல அமைப்புகள், அரசை வலியுறுத்தி வருகின்றன.
தர்மஸ்தலா வழக்கு குறித்து விசாரிக்கும், எஸ்.ஐ.டி.,யிடம் சென்று, சவுஜன்யா கொலை குறித்து விசாரிக்க கோரி, அவரது தாய் குஸ்மாவதியும் புகார் செய்தார்.
உரிய ஆவணம் இந்நிலையில், மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, மங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
உஜ்ரேயில் 2012ல் கொலை செய்யப்பட்ட, கல்லுாரி மாணவி சவுஜன்யா விவகாரத்தில், அவரது மாமா விட்டல் கவுடாவுக்கு தொடர்பு உள்ளது. சவுஜன்யா மீது விட்டலுக்கு ஒரு கண் இருந்தது. சவுஜன்யாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
சவுஜன்யா எதிர்ப்பு தெரிவித்ததால் மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளார். வீட்டில் கொலை நடந்துள்ளது. உடலை எடுத்து வந்து வனப்பகுதியில் போட்டுள்ளார்.
இதுதொடர்பான உரிய ஆவணங்களை சேகரித்து, தட்சிண கன்னடா எஸ்.பி.,யிடம் கொடுப்பேன். விட்டல் கவுடாவும், அவருக்கு உதவியவர்களுக்கு தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'முடா'வில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, முதல்வர் சித்தராமையா 14 வீட்டுமனைகள் வாங்கியதாக, கவர்னரிடம் புகார் அளித்தவர் சிநேகமயி கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில், சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த்திடம் நான்காவது நாளாக எஸ்.ஐ.டி., நேற்று விசாரித்தது. கேரள 'யு - டியூபர்' முனாப்பிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்த பின், ஊடகத்தினரிடம் இருந்து தப்பிக்க, எஸ்.ஐ.டி., அலுவலகம் பின்பக்கம் உள்ள வனப்பகுதி வழியாக, ஜெயந்த் ஓட்டம் பிடித்தார். அவர் ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.