பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் பள்ளி கல்வித்துறை திட்டம்
பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் பள்ளி கல்வித்துறை திட்டம்
ADDED : மே 09, 2026 11:31 PM
பெங்களூரு: கர்நாடகாவில் 10ம் வகுப்பு, பி.யு., 2ம் ஆண்டு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை, ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் திருத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் 10ம் வகுப்பு, பி.யு., 2ம் ஆண்டு பொதுத்தேர்வுகளை, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த விடைத்தாள்களை திருத்துவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் தேவைப்படும்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், கடந்த கல்வியாண்டில் பி.யு., 2ம் ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு, 13.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இந்த செலவுகளை குறைக்கவும், விடைத்தாள் திருத்தும் பணியை எளிதாக்கும் வகையிலும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதவாது, விடைத்தாள்களை திருத்துவதற்கு, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
விடைத்தாள்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, கணினி திரையில் ஆசிரியர்கள் மேற்பார்வையில் திருத்தப்படும். இம்முறையில், மொத்த மதிப்பெண்களை கூட்டும் போது ஏற்படும் பிழைகள், மதிப்பீடு செய்யப்படாத பக்கங்கள் போன்றவற்றை ஏ.ஐ., எளிதில் கண்டறிந்து, விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியருக்கு 'சிக்னல்' கொடுக்கும்.
மாணவர்களின் கையெழுத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் உருவாக்கப்பட உள்ளது. திருத்தப்பட்ட விடைத்தாளை ஏ.ஐ., தொழில்நுட்பம் மீண்டும் சோதிக்கும். திருத்தும் பணிகளில் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படும்.
கன்னடம், ஆங்கில மொழியில் எழுதப்படும் விடைத்தாள்களை திருத்துவதற்கு, முதல் கட்டமாக, தொழில்நுட்பம் தயாராக உள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விடைத்தாள்கள் திருத்துவதற்கு ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் செயல்படும். விடைத்தாள்கள் திருத்தும் போது ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படும். எதிர்காலத்தில் ஏ.ஐ., திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் தேர்வறைகளில் பொருத்தப்படும். இதன் மூலம், ஆள்மாறாட்டங்கள் கண்டுபிடிக்கப்படும்.
ஏ.ஐ., மூலம் பொதுத்தேர்வில் பங்கேற்கும் 15 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் எளிதில் திருத்தப்படும். ஆசிரியர்கள் சோர்வாக இருக்கும் போது, ஏ.ஐ., உதவி செய்யும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
