மண்ணில் புதைக்கப்பட்ட 70 கோதுமை மூட்டைகள் பள்ளி முதல்வர் 'சஸ்பெண்ட்'
மண்ணில் புதைக்கப்பட்ட 70 கோதுமை மூட்டைகள் பள்ளி முதல்வர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 09, 2026 02:15 AM
சிக்கமகளூரு: அரசு உறைவிடப்பள்ளியில் 70 கோதுமை மூட்டைகளை மண்ணில் பதுக்கி வைத்திருந்த பள்ளி முதல்வரை, கர்நாடக உறைவிட கல்வி நிறுவனங்கள் சங்கம், சஸ்பெண்ட் செய்துள்ளது.
சிக்கம களூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவில் எச்.ரங்கபுராவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா உறைவிடப்பள்ளியில், குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க வழங்கப்பட்ட கோதுமை மூட்டைகள், பள்ளி வளாகத்தில் மண்ணில் புதைக்கப்பட்டு உள்ளன என்று சமூக நலத்துறை, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகளிடம், சமூக ஆர்வலர் சிவமூர்த்தி புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், ஏப்., 1ம் தேதி, அங்கு நிலத்தை தோண்டியபோது, 70 கோதுமை மூட்டைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக உறைவிட கல்வி நிறுவனங்கள் சங்க நிர்வாக இயக்குநர் காந்தராஜு கூறியதாவது:
கோதுமை புதைக்கப்பட்ட வழக்கில், உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி, உணவு தானியங்களை சட்ட விரோதமாக அழித்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, முதல்வராக இருந்த ஹரிஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வழக்கில், அங்கு பணியாற்றி வந்த உடற்கல்வி ஆசிரியர் ரவி, சக்லேஸ்பூர் தாலுகாவில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளிக்கும்; சமூக அறிவியல் ஆசிரியர் லிங்கராஜு, நிர்வாக காரணங்களுக்காக பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உறைவிடப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அ தேவேளையில், சமையல் பணியாளராக ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றி வரும் விஷாலம்மாவுக்கு பதிலாக, புதிய நபரை நியமிக்கவும், சமூக நலத் துறைக்கு துணை இயக்குநருக்கு, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.
