/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுரங்க சாலை திட்டத்துக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை
/
சுரங்க சாலை திட்டத்துக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை
சுரங்க சாலை திட்டத்துக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை
சுரங்க சாலை திட்டத்துக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை
ADDED : ஜூன் 26, 2025 11:06 PM
பெங்களூரு:பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, சுரங்க சாலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி, மிகவும் அதிகம். இது பெரும் பிரச்னையாக மக்களை பாதிக்கிறது. இதற்கு தீர்வு காண, மெட்ரோ ரயில் திட்டம், மேம்பாலம் கட்டுவது என, பல திட்டங்களை அரசு செயல்படுத்தியது. தற்போது சுரங்க சாலை அமைக்க, பெங்களூரு நகர பொறுப்பு அமைச்சரும் துணை முதல்வருமான சிவகுமார் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
பெங்களூரின், ஹெப்பாலில் இருந்து, சில்க் போர்டு வரை 16.75 கி.மீ., நீளத்திற்கு சுரங்க சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 17,780.13 கோடி ரூபாய் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கு மாநில அரசு, பட்ஜெட்டில் 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இரட்டை சுரங்கப்பாதைகள் அமையும். பணிகள் முடிவடைந்தால், பயண நேரம் பாதியாக குறையும். போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது, அரசின் எண்ணமாகும்.
அரசின் உத்தரவுப்படி, பணிகளை துவக்க மாநகராட்சி தயாராகிறது. இரண்டு கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்படும். முதல்கட்டத்தில் ஹெப்பாலின், எஸ்டீம் மாலில் இருந்து, சுதந்திர பூங்கா வரையிலான 8.7 கி.மீ., நீளத்திற்கும், இரண்டாவது கட்டத்தில், சுதந்திர பூங்காவில் இருந்து, சில்க் போர்டு வரை 8.7 கி.மீ., நீளத்திற்கும் சுரங்க சாலை அமைக்கப்படும்.
முதல்கட்ட திட்டத்துக்கு, 8,814.78 கோடி ரூபாய், இரண்டாவது கட்டத்திற்கு 8,965.35 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. சில்க் போர்டில் இருந்து, ஹெப்பாலுக்கு தடையின்றி பயணம் செய்யலாம். ஐ.டி., ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சுரங்க சாலை திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தும், சிவகுமார் பொருட்படுத்தவில்லை. சுரங்க சாலை திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என, சபதம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு விஞ்ஞானிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, புவியியல் விஞ்ஞானிகள் ரேணுகா பிரசாத், ஸ்ரீஹரி கூறியதாவது:
பெங்களூரு பெரும் பாறை மீது அமைந்துள்ளது. சுரங்க சாலை அமைக்க ஹைஸ்பீடு இயந்திரங்கள் பயன்படுத்தினால், பல அசம்பாவிதங்கள் ஏற்படலாம். ஏற்கனவே மெட்ரோ உட்பட, பல திட்டங்களால் இந்த மண்டலம் தளர்வடைந்துள்ளது. வானுயர்ந்த கட்டடங்கள், பெரிய, பெரிய கட்டடங்கள் பூமிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
தற்போதைய நிலையில் பூமியை குடைந்தால், பூமி தனக்கு தானே அமைத்துக் கொண்டுள்ள பாதுகாப்பு படலம் சேதமடையும். இது வரும் காலத்தில், இயற்கை சீற்றத்தை ஏற்படுத்தலாம். நாம் நின்றுள்ள பூமிக்கு அடியில் பாறைகள் மட்டுமின்றி, நீரும் உள்ளது. இந்த நீர், ஒரே இடத்தில் நிலையாக இருப்பது இல்லை. பாய்ந்து செல்லும். சுரங்க சாலை திட்டம் தண்ணீர் பாயும் பாதையை தடை செய்யும்.
பூமியின் ஆழத்தில் உள்ள பாறைகள், நீரை தேக்குகின்றன. இதன் பயனாக நகரின் பல இடங்களுக்கு, குடிநீர் கிடைக்கிறது.
இந்த பாறைகள், தண்ணீர் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்குச் செல்லாமல், தடுப்பு சுவர் போன்று செயல்படுகின்றன. சுரங்க சாலை அமைத்தால் இந்த பாறைகளை உடைக்க வேண்டி வரும். இது வேறொரு அசம்பாவிதத்துக்கு காரணமாகலாம்.
ஏற்கனவே நகரின் சுற்றுப்பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. சுரங்க சாலை திட்டத்தை கொண்டு வந்தால், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும். நீர்மட்டம் மேலும் வறண்டு போகும். இதனால் நிலச்சரிவு உள்ளிட்ட அபாயங்களுக்கு, நாமே வழி வகுத்ததாக இருக்கும். வரும் நாட்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரே கிடைக்காமல் போகும் அபாயமும் உள்ளது.
சுரங்க சாலை திட்டம் அசம்பாவிதங்களுக்கு காரணமாவதுடன், செலவும் மிகவும் அதிகமாகலாம். மாநில அரசு இரண்டு திசைகளில், சுரங்க சாலை அமைக்க முற்பட்டுள்ளது. பெங்களூரின் மற்ற இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு, அரசு என்ன செய்யும். சுரங்க சாலை திட்டம், விவேகமற்ற திட்டமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெங்களூரில் மேற்கொள்ளப்படும் திட்டங்களால், பூமி பாதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு மேம்பாலங்களுக்காக, பாறைகள் தகர்க்கப்பட்டதால், பூமி பலவீனம் அடைந்துள்ளது. அதன்பின் மெட்ரோ ரயில் பாதை பில்லர்கள் பொருந்த, ஹைஸ்பீடு இயந்திரங்கள் பயன்படுத்தி, பூமியை பாழாக்கியது. இப்போது சுரங்க சாலை அமைக்க முற்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், வரும் நாட்களில் பெங்களூரில் உள்ள, பெரிய, பெரிய கட்டடங்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.
- எல்லப்ப ரெட்டி,
சுற்றுச்சூழல் ஆர்வலர்