ADDED : ஆக 28, 2026 02:32 AM

பெங்களூரு: சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் ஸ்கூட்டரில் சென்றவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெங்களூரு சிக்பேட் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாத், 52. இவர் தன் மனைவி, பேரக்குழந்தையுடன் ஸ்கூட்டரில் கடந்த திங்கட்கிழமை சுதம்நகர் வழியாக சென்றார். அப்போது, சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியிருந்தது. சாலை பள்ளத்தில் தெரியாமல் வண்டியை விட்டார். இதில், மூவரும் கீழே தவறி விழுந்தனர். விஸ்வநாத்துக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து, விஸ்வநாத் குடும்பத்தினர் கூறியதாவது:
சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் விஸ்வநாத்தின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அறுவை சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். பணத்திற்கு என்ன செய்வது என தெரியவில்லை. இதுவரை, ஜி.பி.ஏ., அதிகாரிகள் உட்பட யாரும் எங்களை பார்க்கவில்லை.இழப்பீட்டு தொகை எதுவும் தரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
