நவீன கருவிகள் இருந்தும் கைகளால் தேரை உருவாக்கும் சிற்பி
நவீன கருவிகள் இருந்தும் கைகளால் தேரை உருவாக்கும் சிற்பி
ADDED : மே 17, 2026 12:07 AM

- நமது நிருபர் -:
பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின் நந்தகாவன் கிராமத்தை சேர்ந்தவர் சிதானந்தா படிகேரா. இவரின் குடும்பத்தினர் பாரம்பரிய சிற்ப கலைஞர்கள். இவரும், பாரம்பரிய முறையில் பிரமாண்டமான மர தேர்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டபோதும், இயந்திரங்களை பயன்படுத்தாமல், தேக்கு மரத்தில் அழகான தேர்களை செதுக்கும் இவரின் கலை பிரமிக்க வைக்கிறது.
கலைநயமிக்க, நுணுக்கமான விபரங்களுடன் தேர்களை உருவாக்குவதில் வல்லுநரான சிதானந்தா, பல பிரமாண்டமான தேர்களை செதுக்கி, பல கோவில்களுக்கு ஒப்படைத்து உள்ளார். இதை ஒரு தொழிலாக பார்க்காமல், மிகுந்த பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செய்து வருகிறார்.
அர்ப்பணிப்பு
தேர் வடிவமைப்பது என்பது தச்சு வேலை மட்டுமல்ல. அதில் அறிவியலும் அடங்கி உள்ளது. கோவிலின் மூல கருவறையின் பரிமாணங்களையும், தேருக்கான ஆகம விதிகளையும் துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ப தேர்களை உருவாக்குகிறார்.
ஆகம, வாஸ்து விதிகளில் அவர் காட்டும் துல்லியம், அவரது தொழில்முறை திறனை பிரதிபலிக்கிறது.
நவீன காலத்தில் இத்தகைய பாரம்பரிய கலைகள் மறைந்து வரும் வேளையில், பாரம்பரிய கலையை பாதுகாக்க கடுமையாக உழைத்து வரும் சிதானந்தாவின் பணி, பெலகாவி மாவட்ட மக்களுக்கு பெருமை அளிக்க கூடிய விஷயமாகும்.
நல்ல பெயர்
இது குறித்து, சிதானந்தா படிகேரா கூறியதாவது:
எங்கள் குடும்ப பாரம்பரியத்தின் மூலமாகவும், எங்கள் தந்தையிடம் இருந்து இந்த தொழிலை தொடர்ந்து வருகிறோம். எங்கள் தந்தை ஒரு சிறந்த சிற்பி. தாலுகாவில் அவருக்கென நல்ல பெயர் உள்ளது. நாங்கள் பாரம்பரிய கலை மற்றும் திறமையுடன் தேர்களை வடிவமைக்கிறோம். என் தந்தை காலத்தில் இருந்தே, இந்த தொழிலை செய்து வருகிறேன். இதுவரை நானே 11 தேர்களை உருவாக்கி, மாநிலத்தின் முக்கிய கோவில்களுக்கும், அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் உள்ள கோவில்களுக்கும் வழங்கி வருகிறேன்.
நாங்கள் எந்த நவீன இயந்திரங்களையும் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, தேர்கள், பல்லக்குகள், சிம்மாசனங்கள், கோவில் கதவுகளை கைகளாலேயே செதுக்குகிறோம். பல தலைமுறையாக இதையே நாங்கள் பின் பற்றி வருகிறோம்.
சுத்தமான ஆடை ஒரு முழுமையான தேரை வடிவமைக்க, நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகும். இதற்காக, ஏழு பேர் தொடர்ந்து பணியாற்றுவோம். தேக்கு, கரிமட்டி எனும் கருமருது மரத்தால் மட்டுமே தேர்களை உருவாக்க முடியும். ஒரு தேரை உருவாக்க, 22 முதல் 23 லட்சம் ரூபாய் வரையாகும். மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கோவிலுக்காக தற்போது, 12வது தேரை உருவாக்கி வருகிறேன்.
தேரை உருவாக்கும்போது, தர்மசாஸ்திர விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பூஜைக்கு பின், சுத்தமான ஆடைகளுடன், காலணிகளோ, பெல்டுகளோ அணியாமல், மிகுந்த அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் நாங்கள் வேலை செய்கிறோம்.
தேரை செய்ய துவங்கினால், தினமும் 18 மணி நேரம் அப்பணியில் ஈடுபடுவோம். எங்களின் கைவினை கலைபடைப்புக்கு பெருமளவில் ஆதரவு இருப்பதால், அடுத்தடுத்து தேர்களுக்கான முன்பதிவுகள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்கள் செய்யும் கலையை எங்கள் குடும்பம் மரபுரிமையாகப் பெற்றிருப்பதை ஒரு வரமாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
