மொபைல் போனை மறைத்து வைத்து விளையாட்டு காட்டிய காவலாளி கொலை
மொபைல் போனை மறைத்து வைத்து விளையாட்டு காட்டிய காவலாளி கொலை
ADDED : மே 13, 2026 11:36 PM
பெங்களூரு: மொபைல் போனை மறைத்து வைத்து, விளையாட்டு காட்டியதால் ஏற்பட்ட தகராறில், காவலாளியை கத்தியால் குத்தி கொன்ற நண்பரை போலீசார் தேடுகின்றனர்.
ஹூப்பள்ளியை சேர்ந்தவர்கள் பரசுராம், 25, ராமு, 26. நண்பர்களான இருவரும் பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்தனர்.
சவுடேஸ்வரி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 10ம் தேதி இரவு குடிபோதையில் ராமு வீட்டிற்கு வந்தார். 'என்ன செய்கிறோம்' என்று தெரியாமல் நிலைதடுமாறி நின்றார். அவரை படுக்கைக்கு அழைத்து சென்று பரசுராம் துாங்க வைத்தார்.
அப்போது, ராமுவின் மொபைல் போனை எடுத்து, பரசுராம் மறைத்து வைத்தார். நேற்று முன்தினம் காலையில், போதை தெளிந்ததும் மொபைல் போனை ராமு தேடினார். பரசுராமிடம் சென்று கேட்ட போது, அவர் எனக்கு தெரியாது என்று விளையாட்டு காட்டினார்.
கோபம் அடைந்த ராமு, பரசுராமை ஆபாச வார்த்தையில் திட்டியதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். கோபம் அடைந்த ராமு, கத்தியை எடுத்து பரசுராமை சரமாரியாக குத்தி விட்டு தப்பினார்.
உயிருக்கு போராடிய பரசுராமை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர் பரசுராமை, ஆம்புலன்ஸ் மூலம் ஹூப்பள்ளிக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். பரசுராம் சகோதரர் கங்கப்பா அளித்த புகாரில், ராமு மீது கொலை வழக்குப்பதிவு செய்த மாரத்தஹள்ளி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
