எம்.எல்.சி., தேர்தலில் சீட் மறுப்பு பா.ஜ., மூத்த தலைவர் ராஜினாமா
எம்.எல்.சி., தேர்தலில் சீட் மறுப்பு பா.ஜ., மூத்த தலைவர் ராஜினாமா
ADDED : மார் 12, 2026 05:41 AM

ஹூப்பள்ளி: எம்.எல்.சி., தேர்தலில் சீட் கிடைக்காததால், கர்நாடக பா.ஜ., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பதவியை லிங்கராஜ் பாட்டீல் ராஜினாமா செய்து உள்ளார்.
கர்நாடக மேல்சபையில் நவம்பர் மாதம் காலியாகும் 3 எம்.எல்.சி., பதவிகளுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய பா.ஜ., நேற்று முன்தினம் 3 வேட்பாளர்களை அறிவித்தது. மேற்கு பட்டதாரி தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.சி., சங்கனுார் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இத்தொகுதியில் போட்டியிட, கர்நாடக பா.ஜ., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் லிங்கராஜ் பாட்டீல் முடிவு செய்து இருந்தார். தனக்கு சீட் கிடைக்காததால், ஒழுங்கு குழு தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து உள்ளார்.
இதற்கான கடிதத்தை, கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திராவிடம் கொடுத்து உள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று லிங்கராஜ் பாட்டீல் அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் நேர்மையான, விசுவாசமான தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை. கட்சி எனக்கு அநீதி இழைத்து உள்ளது. கடந்த 37 ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கிறேன். என்னை போன்றோரை அங்கீகரிக்காமல், மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு மீண்டும் சீட் கொடுத்து உள்ளனர்.
தற்போதைக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் பதவியை மட்டும் ராஜினாமா செய்து உள்ளேன். இன்னும் எனக்கான நேரம் முடியவில்லை. சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையில் எட்டு நாட்கள் காத்திருப்பேன். அப்போதும் சீட் கிடைக்கா விட்டால் அடுத்தகட்ட முடிவை எடுப்பேன்.
சங்கனுாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கூடாது என்று தொண்டர்கள் கூறினர். அவர் கட்சிக்காக எதுவும் செய்யவில்லை. எந்த அடிப்படையில் அவரை மீண்டும் தேர்வு செய்தனர் என்று தெரியவில்லை. வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இருந்ததை பார்த்ததும், மனதளவில் வேதனை அடைந்தேன்.
இவ்வாறு கூறினார்.
