/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீஹாரிகளுக்கு தனியிடமா? சிவகுமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
/
பீஹாரிகளுக்கு தனியிடமா? சிவகுமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
பீஹாரிகளுக்கு தனியிடமா? சிவகுமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
பீஹாரிகளுக்கு தனியிடமா? சிவகுமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
ADDED : நவ 04, 2025 04:47 AM

பெங்களூரு: பீஹாரிகள் தங்குவதற்கு பெங்களூரில் தனியிடம் கட்டித்தருவதாக துணை முதல்வர் சிவகுமார் கூறியதற்கு ம.ஜ.த., கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என, மாநில காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். பிழைப்புக்காக வேலை தேடி கர்நாடகாவுக்கு வந்த பீஹாரிகளில் பெரும்பாலானோர் பெங்களூரில் உள்ளனர்.
பெங்களூரு கெம்பாபுராவில் பீஹாரிகள் அதிகம் வசிக்கும் பகுதியில், பீஹார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி துணை முதல்வர் சிவகுமார் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'பீஹாரிகள் கடுமையான உழைப்பாளிகள். கூலி முதல் முதலாளி என அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். கூலித்தொழிலாளிகள் ஓட்டுப் போடுவதற்கு பில்டிங் கான்ட்ராக்டர்கள் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். கான்ட்ராக்டர்களிடம் பேசி உள்ளேன். தேர்தலில் வெற்றி பெற்றால் பீஹாரிகள் தங்குவதற்கு பெங்களூரில் தனியிடம் கட்டித் தருவேன்' என்றார்.
இவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக பீஹாரிகளுக்கு பெங்களூரில் தனியிடம் என கூறியதற்கு ம.ஜ.த., கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ம.ஜ.த., வெளியிட்ட அறிக்கை:
ஓட்டுக்காக பூர்விக கன்னடர்களின் நிலத்தை, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவது எவ்விதத்தில் நியாயம்? காங்கிரசாருக்கு வெட்கம் என்பதே இல்லையா? கன்னடர்களின் நலனை பாதுகாப்பதற்கு பதிலாக, கட்சியின் உயர்மட்ட குழுவின் உத்தரவை கேட்கும் அடிமையாக மாநில காங்கிரஸ் மாறிவிட்டது.
கர்நாடகாவிற்கு தர வேண்டிய மானியம் அனைத்தும் பீஹாருக்கு கொடுக்கப்பட்டதாகவும், இருப்பினும் அங்கிருப்போர் இங்கு வந்து கன்னடர்களின் வேலையை பறிப்பதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஆனால், தற்போது இதற்கு நேர்மாறான கருத்துகளை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூறுகின்றனர். ஏன் மாறி, மாறி கருத்துகளை கூறுகிறீர்கள்?
பீஹாரில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பெங்களூரில் தனியிடம் கட்டித்தருவது என்பது எவ்வளவு முட்டாள்தனம்? கீழ்த்தனமான ஓட்டு வங்கி அரசியலில் காங்கிரஸ் இறங்கி விட்டது. கன்னடர்களின் வரிப்பணம் காங்கிரசின் கருவூலத்திற்கு நேரடியாக செல்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

