ADDED : ஏப் 11, 2025 06:56 AM
ஆனேக்கல்: ரவுடியை கொலை செய்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு, ஆனேக்கல் தாலுகா, ஹெப்பகோடி அருகே கடந்த மாதம் 31ம் தேதி நேபாளத்தை சேர்ந்த மஞ்சா என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஹெப்பகோடி போலீசார், கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். ஜெகதீஷ், மகேஷ், தினேஷ், நந்தன், மஞ்சுநாத், ரவி, புல்லட் பாபு ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மஞ்சா, அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் சில நாட்களுக்கு முன் 5,000 ரூபாய் பணம் கேட்டு தொல்லை கொடுத்து உள்ளார். மகேஷ் பணம் தர மறுத்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மஞ்சா, அவரை கன்னத்தில் அறைந்து உள்ளார்.
இது குறித்து, தன் நண்பர்களிடம் மகேஷ் கூறினார். பின், அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, யுகாதி பண்டிகையின் போது மது அருந்தி கொண்டிருந்த மஞ்சாவை அரிவாள், இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

