/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
12ம் நுாற்றாண்டில் கட்டிய கோவிலுக்கு செல்வோமா?
/
12ம் நுாற்றாண்டில் கட்டிய கோவிலுக்கு செல்வோமா?
ADDED : மே 13, 2025 12:24 AM

பெங்களூரு - கனகபுரா பிரதான சாலையில், சுப்பிரமண்யபுரா வசந்தபுராவின் குப்தகிரி மலையில், ஸ்ரீவசந்த வல்லபராய சுவாமி கோவில் உள்ளது. 12ம் நுாற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
வல்லபராய சுவாமி என்ற பெயருடன் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இதுமட்டுமின்றி, பெருமாள் கதத்துடன் அருள்பாலிக்கும் இருக்கும் கோவில்களில், இதுவும் ஒன்றாகும்.
புராணங்கள்படி ஸ்ரீதேவி, பூதேவியை திருமணம் செய்து கொண்ட மஹாவிஷ்ணு, பெங்களூரு வசந்தபுராவில் உள்ள குளத்தில் 'வசந்த ஸ்நானம்' செய்தார் என்று கூறப்படுகிறது.
நானே வருவேன்
விஷ்ணுவின் திருமணத்தை காண முடியவில்லையே என்று மாண்டவ்ய முனிவர் வருத்தம் அடைந்தார். அப்போது விஷ்ணு பகவான், 'நீ இருக்கும் இடத்துக்கு நான் வருவேன்' என்று கூறினார்.
அதன்படி, வசந்தபுரா குளத்தில் நீராடிய முனிவர், அருகில் உள்ள குப்தகிரி மலையில் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது திருக்கல்யாண கோலத்தில் விஷ்ணு, முனிவருக்கு காட்சி அளித்தார். இங்குள்ள விஷ்ணு, கையில் கதத்துடன் அருள்பாலிக்கிறார்.
இந்த கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முன்னதாக கட்டப்பட்டதாகும். மைசூரு மன்னர்கள் இங்கு நடந்த பூஜைகளில் பங்கேற்றுள்ளனர்.
கருவறையில் சுவாமிகளுடன் மாண்டவ்ய முனிவரின் விக்ரஹமும் உள்ளது. சுதர்சன சக்கரம், ஆஞ்சநேயர், நரசிம்மர் விக்ரஹங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இத்துடன் 12 ஆழ்வார் சிலைகளும் உள்ளன. தனுர் மாதத்தில் திருப்பாவை, நாலாயிரம் திவ்யபிரபந்தம் பாடப்படுகின்றன.
ரோகிணி நட்சத்திரம்
ஐந்து தீர்த்தங்கள் இருந்த இடத்தில் தற்போது சங்கு, சக்கரம், வசந்த தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. கல்யாண உத்சவத்தின்போது, திருமணமாகாதவர்கள் சுவாமியை வேண்டி, கையில் கங்கணம் கட்டிக் கொண்டால், 48 நாட்களில் திருமணம் நடக்கும் என்றும்; ரோகிணி நட்சத்திர நாளில் விஷ்ணுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தால், குழந்தை பேறு இல்லாத தம்பதிக்கு குழந்தை பிறக்கும் என்றும் நம்பப்படுகிறது.
கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசிக்க முடியவில்லையே என்ற கவலைப்பட தேவையில்லை. கோபுரத்தில் அவரது விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அவரை தரிசித்தாலே, கருவறையில் தரிசித்த பலன்கள் கிடைக்குமாம்.
- நமது நிருபர் -