/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கஸ்துார் ரங்கப்பா நாயக்கர் கோட்டைக்கு செல்வோமா?
/
கஸ்துார் ரங்கப்பா நாயக்கர் கோட்டைக்கு செல்வோமா?
ADDED : ஜூன் 18, 2025 11:14 PM

வார இறுதி நாட்களில் வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு சுற்றுலா செல்ல சரியான தேர்வு, கஸ்துாரி ரங்கப்பா நாயக்கர் கோட்டை.
துமகூரு மாவட்டம், சிராவில் உள்ளது கஸ்துாரி ரங்கப்பா கோட்டை. இந்த கோட்டை, விஜயநகர பேரரசின் படைத்தலைவராக இருந்த சித்திரதுர்க நாயக்கரின் வழிவந்த கஸ்துாரி ரங்கப்ப நாயக்கரின் வீரத்தை பறைசாற்றும் விதமாக, கோட்டைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
ஏறக்குறைய 17ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் விஜயநகர பேரரசின் கட்டுப்பாடில் இருந்த கோட்டை, பின்னர் பல மன்னர்களின் கைமாறியது. இது தான் கோட்டையின் சிறிய வரலாறு.
* புது பொலிவு
பெங்களூரிலிருந்து கோட்டை 123 கி.மீ., துாரத்தில் உள்ளது. கோட்டையை சுற்றிப் பார்க்க விரும்புவோர் கோட்டை குறித்த புரிதலுடன் சென்று பார்ப்பது சிறந்தது. கோட்டை பல நுாற்றாண்டுகள் ஆகியும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதே சமயம், சில பகுதிகளில் சிதலமடைந்தும் காணப்படுகிறது. இதனால், இந்திய தொல்லியல் துறை பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. கூடிய விரைவில் கோட்டை புதுபொலிவு பெறும்.
இந்த கோட்டை 197.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இன்றும் பழமை மாறாமல், பல வரலாற்று சின்னங்களை கொண்டுள்ளது. கோட்டையில் உள்ள மறைவிடங்கள், ஆயுத கிடங்குகள், உணவு கூடங்கள் ஆகியவற்றை இன்னும் நம்மால் பார்க்க முடிகிறது. கோட்டையின் மதில் சுவர்கள் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றன.
* மன நிம்மதி
இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது, தங்கள் குழந்தையுடன் செல்வது சிறப்பு. குழந்தைகளுக்கு நேரில் சென்று பாடம் கற்பிக்கும் போது, அவர்கள் காது கொடுத்து கேட்க வாய்ப்பு அதிகம். இது போன்ற சுற்றுலாக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும், குழந்தைகளுக்கு சற்று மன நிம்மதியையும் தரும்.
எப்படி செல்வது?
பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் நேரடியாக சிரா பைபாசிற்கு செல்லாம். அங்கிருந்து, கோட்டையை அடையலாம்.
ரயில்: கெம்பே கவுடா ரயில் நிலையத்தில் இருந்து துமகூரு ரயில் நிலையத்திற்கு செல்லவும், அங்கிருந்து பஸ் மூலம் சிராவை சென்று அடையலாம். பின்னர், கோட்டைக்கு நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ செல்லலாம்
- நமது நிருபர் -.