ADDED : ஆக 01, 2026 06:33 AM

- நமது நிருபர் -
கேக் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பேக்கரிகளில் வாங்கி வந்து தின்பதை விட, வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி, நாமே எளிதாக கேக் செய்யலாம். இதை எப்படி செய்வது என, பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பார்லே ஜி பிஸ்கட் - 1 பாக்கெட்
பால் - 2 கப்
கன்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் ஸ்பூன்
டுட்டி ப்ருட்டி -அலங்கரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் பார்லே ஜி பிஸ்கட்டுகளை, சிறு சிறு துண்டுகளாக உடைத்து, மிக்சியில் போட்டு பவுடராக்கவும். இந்த பவுடரில் பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும். அதன்பின் பாலை சிறிது, சிறிதாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
இதில், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும். கேக் ட்ரேவில் எண்ணெய் அல்லது நெய் தடவி, கேக் மாவை பரப்பவும். அதன் மீது டுட்டி ப்ருட்டி துாவி அலங்கரிக்கவும். ஓவன் இல்லையென்றால் குக்கர் பயன்படுத்தலாம். குக்கரில் விசில் மற்றும் கேஸ்கட்டை எடுத்து விட்டு, உப்பு அல்லது மணல் பரப்பி, குக்கரை மூடி, 10 நிமிடம் சூடாக்கவும்.
அதன் பின், இதில் கேக் ட்ரேவை வைத்து, மிதமான தீயில் 35 - 40 நிமிடம் வேக வைத்தால், சுவையான பிஸ்கட் கேக் தயார். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்தால், பலகாரங்கள் இல்லாத சூழலில், இந்த பிஸ்கட் செய்து கொடுத்து அசத்தலாம். அதிக நேரம் தேவைப்படாது!
